Jiiva | Raashii Khanna | Aghaththiyaa Aghaththiyaa
திரை விமர்சனம்

Aghathiyaa | நம் முன்னோர்கள் முட்டாள் இல்லை தான் அதற்காக..!

சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன மீன் குழம்பையும், சக்கரைப் பொங்கலையும் ஒன்றாக சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது இந்த அகத்தியா.

Johnson, karthi Kg

ஹாரர் + ஃபேண்டசி மூலம் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை பேச முயலும் வித்தியாசமான முயற்சியே அகத்தியா.

பெரிய முதலீட்டில் படம் ஒன்றை தயாரிக்க முயலும் சினிமா கலை இயக்குநர் அகத்தியா (ஜீவா), எதிர்பாராத விதமாக படம் நின்று போக, படத்திற்காக போட்ட செட்டை SCARY HOUSE ஆக மாற்றி புது ரூட் பிடிக்கிறார். லாபகர தொழில், வீணா (ராஷி கண்ணா) உடன் காதல் என வாழ்க்கை கலர்ஃபுல்லாக மாறுகிறது. ஜீவாவின் நண்பர்களாக ஷாரா & சினிமாப்பையன் அபிஷேக். ஆனால், அந்த வீட்டில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது. இந்த அமானுஷ்யம் என்ன என தெரிந்து கொள்ள முயலும் அகத்தியாவுக்கு, 1940ல் வாழ்ந்த சித்தார்த்தன் (அர்ஜூன்) என்ற சித்த மருத்துவர் பற்றிய கதை தெரிய வருகிறது. யார் சித்தார்த்தன்? அவருக்கு என்ன நடந்தது? அகத்தியாவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை எல்லாம் சொல்லும் படமே அகத்தியா.

ஹாரர் படத்திற்குள் சித்த மருத்துவம் பற்றி பேசும் களம் என்பதே சற்று புதிதான ஐடியா. அதை முயற்சி செய்ததற்கும், க்ளைமாக்ஸ் காட்சியை கிராஃபிக்ஸில் கொடுத்ததற்கும் பா விஜய்க்கு வாழ்த்துகள். அதே போல், Scary Houseக்குள் நிஜமான பேய் என்கிற ஐடியாவும் கொஞ்சம் சுவாரஸ்யமானது. யுவன் தன்னாலான வரை படத்தை இசையால் சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார். என் இனிய பொன் நிலாவே ரீமிக்ஸ் அருமை. இவை தவிர மற்ற எதுவும் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை.

Jiiva | Raashii Khanna| Aghaththiyaa

படத்தில் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையா? அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? என்ற லாஜிக்குகளை தள்ளி வைத்துவிட்டு, பார்த்தால் கூட படம் சுவாரஸ்யமாக இல்லை என்பதே பெரும் பிரச்னை. ஏனோ தானோவென ஆரம்பித்து எங்கெங்கோ அலைபாய்கிறது கதை. அகத்தியா - சித்தார்த்தன் இருவரின் வாழ்வும் ஒரு இடத்தில் சம்பந்தப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மறைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொண்டு வருவது சித்தார்த்தனுக்கும், அதன் மூலம் பலனடைவது அகத்தியாவுக்கும் அவசியம் என்கிற கனெக்ட் ஒக்கே. ஆனால் அதை திரைக்கதையாக்கி இருக்கும் விதம் சுத்தமாக எடுபடவில்லை. திடீரென அகத்தியா பிறந்த கதையை சொல்வது, சிலையில் இருந்து ஒளி குழந்தைமேல் படுவது என ஓவர் ஃபேன்டஸியாக ஒரு பக்கம் கதை செல்ல, கல்லறையில் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கும் ஹீரோ என அகத்தியா ஜோன்ஸ் களம் இறங்கும் ஃபேண்டஸியாகவும் கதை நகர்கிறது. போதாக்குறைக்கு பேய், மறுபிறவி போன்ற கூடுதல் மசாலாக்களையும் அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

ஜீவா ஹீரோ என சொல்லப்பட்டாலும், அவருக்கோ ராஷி கண்ணாவுக்கோ படத்தில் முக்கியத்துவமே இல்லை. அர்ஜூன் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் கவனிக்க வைக்கிறது. பாபா படத்தில் வீட்டு வேலைகள் செய்வதையும், யோகாசனத்தையும் இணைத்து ரஜினி பேசியது எப்படி இப்போதுவரை டிரெண்டிங்கில் இருக்கிறதோ, அதே போல் எந்த மூலிகை, எதற்கு நல்லது என அர்ஜூன் இந்தப் படத்தில் பேசியிருக்கும் க்ளிப் வைரலாக சுற்றும் என்பது கேரண்டி. செம்பருத்தியில் செம்பு இருக்கிறது போன்ற வரிகளில் இருக்கும் ஸ்மார்ட்னெஸ் மற்ற வரிகளிலும் இருந்திருக்கலாம்.

இந்தியர்களின் நிபுணத்துவத்தையும், அவர்களின் பெருமைகளையும் அறிவாளித்தனத்தையும் பதிவு செய்யவில்லை என்பது பற்றிய ஆதங்கம் புரிகிறது. ஆனால், மேம்போக்கான செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு போலி பெருமிதங்களை, இந்தியர்களின் மகத்துவம், தமிழர்களின் மேதாவித்தனம் என நிறுவ நினைப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். சித்த மருத்துவம் வேண்டாம் என முற்றிலும் புறக்கணிக்கவில்லை, அறிவியல் ரீதியில் நிரூபித்த சிகிச்சைகள் எப்போதும் ஏற்புடையதே. ஆனால் கிராஃபிக்ஸ் விஷுவல் எஃபக்ட்ஸ் எல்லாத்தையும் போட்டு கிண்டி, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை மார்டனாக சொல்லும் முயற்சியாக மட்டுமே எஞ்சுகிறது அகத்தியா. அதிலும், ஒரு கட்டத்திற்கு மேல் ' வாய் மணக்க சித்த மருத்துவம், தாம்பூலம் சிறக்க சித்த மருத்துவம் ' என அர்ஜூன் அடுக்கிக்கொண்டே போவது நம்மை டரியலாக்குகிறது. ஃபேன்டஸி படங்கள் எடுப்பதில் யாதொரு பிழையும் இல்லை. ஆனால், ஒரு பக்கம் Pseudo Science அபத்தங்களை அள்ளிவீசிய படியே, இன்னொரு பக்கம் பாரதிதாசன், விடுதலை, பெரியார், முரசொலி என்றெல்லாம் பகுத்தறிவுப் பக்கம் கதையை சொல்ல முயன்றிருப்பது பேராபத்து. அலோபத்தி போன்ற Evidence Based Medicineக்கு மாற்றாக மற்ற மருத்துவமுறைகளை பரிந்துரைப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனா, சர்வ லோக நிவாரணி போல் சினிமாவில் வாட்சாப் ஃபார்வர்டுகளை அள்ளித் தெளிப்பதன் ஆபத்துக்களை பா விஜய் உணர வேண்டும்.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதாக படம் முடிந்த பின்னரு, ஒரு லோடு ' முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை' கட்டுரைகளை கொட்டிக்கொண்டே இருக்கிறார். எங்கள் காதுகளும், விழிகளும் பாவமில்லையா பா விஜய்.

மொத்தத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன மீன் குழம்பையும், சக்கரைப் பொங்கலையும் ஒன்றாக சாப்பிட்டால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கிறது இந்த அகத்தியா.