hit 3 Nani, Srinithi
திரை விமர்சனம்

எந்த வழக்கை விசாரிக்கிறாரோ, அதே வழக்கில் கைதாகும் அதிகாரி... க்ரைம் தில்லராக மிரட்டும் HIT 3!

குற்றச்செயல் புரியும் ஒரு கும்பலை பிடிக்க கிளம்பும் காவலதிகாரியின் ஆக்ஷன் பயணமே ‘ஹிட் 3'.

Johnson

அர்ஜுன் சர்க்கார் (நானி) Homicide Intervention Teamல் பணிபுரியும் காவலர். படத்தின் துவக்கத்தில் அவர் செய்த ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறார். ஃபிளாஷ்பேக்கில் பல இடங்களில் ஒரே விதமாக நடக்கும் கொலைகளை பற்றி விசாரிக்கிறார் அர்ஜுன் சர்க்கார்.

hit 3

ஆனால் அதிர்ச்சி அளிக்கும்படி ஒரு கட்டத்தில் அர்ஜுன் சர்க்காரே அதே போன்ற கொலை ஒன்றை செய்து அதை வீடியோவும் எடுக்கிறார். உண்மையில் இந்தக் கொலைகளை செய்வது யார்? எதற்காக செய்கிறார்கள்? அர்ஜுன் சர்க்கார் ஏன் கொலை செய்கிறார்? அவர் சிறைக்கு செல்ல காரணம் என்ன? என்பதை எல்லாம் விவரிக்கும் படமே ‘ஹிட் 3’

கையிலெடுக்கும் வழக்கிலேயே சிக்கும் காவல் அதிகாரி..

ஹிட் படத்தின் முந்தைய பாகங்கள் போலவே இந்த பாகத்தையும் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சலீஷ் கோலனு. முந்தைய இரு பாகங்களும் க்ரைம் இன்வஸ்டிகேஷன் அதிகம் என்றால், இதில் ஆக்ஷனை அதிகமாக்கி கொடுத்திருக்கிறார். நானி ஸ்ட்ரிக்ட்டான அதிகாரியாய், Angry Issues இருக்கும் நபராக பக்காவாக பொருந்துகிறார். குற்றவாளிகளை அடித்து நொறுக்கி வெறி ஏற்றுவதோ, ஸ்ரீநிதி பார்த்ததும் அமைதியாக பேசுவதும் என ஒவ்வொரு உணர்வையும் அழகாக வெளிக்காட்டுகிறார். ஸ்ரீநிதி ஷெட்டிக்கு வழக்கமான ஹீரோயின் ரோலாக அல்லாமல், கதையில் பங்களிப்பும் உள்ள கதாப்பாத்திரம். அதை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். இவர்கள் தவிர ராவ் ரமேஷ், சமுத்திரக்கனி, கோமாளி பிரசாத், ரவீந்திர விஜய், டிஸ்கா சோப்ரா, பிரதீப் பாபர் என துணை நடிகர்களுக்கு சின்ன சின்ன ரோல். ஆனாலும் மனதில் நிற்கிறார்கள்.

hit 3

எந்த வழக்கை விசாரிக்கிறாரோ, அதே வழக்கில் நானி கைதாகிறார் என்பதாலேயே படத்தில் ஒரு சுவாரஸ்யம் கூடுகிறது. அந்த வழக்கு சம்பந்தமாக க்ளூ கண்டுபிடித்து அந்த நெட்வொர்க்கை பற்றி தெரிந்து கொள்வது என முதல் பாதி இன்வஸ்டிகேஷன் எல்லாம் பரபரவென நகர்கிறது. பாடல் ரொமான்ஸுக்கு மட்டும் ஹீரோயின் என இல்லாமல், அவரால் கதையில் என்ன நடக்கிறது என்பதை சேர்த்திருந்ததும் பலம். அவரை வைத்து கொடுத்த அந்த டிவிஸ்ட் மட்டும் எளிதில் கணிக்கும் படி இருந்தது. வெறுமனே ஹீரோ கொடூர கொலைகளை செய்கிறார் என்பதாக இல்லாமல், அவர் இயல்பிலேயே வன்முறையான நபர், கோபம் வந்தால் எதையும் செய்வார் என அவரது கதாப்பாத்திர வரைவுக்குள் வன்முறையைக் கொண்டு வந்ததும் இன்னொரு ப்ளஸ்.

கதையில் இருக்கும் பிரச்னை..

மிக்கி இசையில் போராட்டமே பாடல் மட்டும் கவனிக்க வைக்கிறது. ஆனால் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். பல ஆக்ஷன் காட்சிகளுக்கு எனர்ஜி ஏற்றுகிறார் மிக்கி. காஷ்மீர், மியூஸியம் ஹவுஸ், ஆந்திரா எனப் பல இடங்கள் கதை பயணித்தாலும் படத்தின் கலரை அழகாக செட் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷானு ஜான் வர்கீஸ். எடிட்டிங் மூலமாக படத்தை முடிந்த வரை பரபப்பாக கொண்டு செல்கிறார். இடையிடையே வரும் இன்டர் கட் கூட நச் என பொருந்துகிறது.

hit 3

படத்தின் பலவீனம் என்ன என்றால், பரபரப்பாக நகர்கிறது என்பதை எல்லாம் தாண்டி, மிக எளிமையான ஒரு களமாக இருக்கிறது என்பதே. முதல் பாதியில் இருந்த ஒரு ஸ்மார்ட்னெஸ், இரண்டாம் பாதியில் சுத்தமாக மிஸ்ஸிங். அது வெறுமனே சண்டைகாட்சிகளின் தொகுப்பாக மட்டும் இருக்கிறது. லாஜிக் என யோசித்தால் பல இடங்கள் இடிக்கும் படி இருக்கிறது.அதையும் மீறி படம் பரபரப்பாக செல்வதால், நாம் அந்த லாஜிக்கில் கவனம் செலுத்த மாட்டோம். க்ளைமாக்சில் வரக்கூடிய அந்த கேமியோ அட்டகாசம். அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பை இப்போதே தூண்டுகிறது.

hit 3

மொத்தத்தில் ஒரு சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் பார்த்த உணர்வைக் கொடுக்கிறது ஹிட் 3. படத்தின் வன்முறைக்காக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.