Rio Raj, Malavika Manoj Aanpaavam Pollathathu
திரை விமர்சனம்

மார்டன் டே திருவிளையாடலாக காமெடி ஓகே, ஆனால் கருத்து? | Aan Paavam Pollathathu Review

ரியோ ராஜ் இதுவரை நடித்த படங்களை விட, இந்தப் படத்தில் பக்காவாக செட் ஆகி இருக்கிறார். பாத்திரமும் அவரது நடிப்பு மீட்டருக்கு பொருந்துவதால் பல காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.

Johnson

சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற நவீன திருவிளையாடலே `ஆண்பாவம் பொல்லாதது'.

சிவா (ரியோ ராஜ்)  சக்தியை (மாளவிகா மனோஜ்) பெண் பார்க்க செல்கிறார். பேசி பழகி பிடித்துப் போக இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பெண்கள் அவர்கள் விருப்பப்படி இருக்க வேண்டும் என நினைப்பவராக சிவாவும், புரட்சி பெண்ணாக சக்தியும் தங்களை காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் காலம் போகப் போக, அவர்களின் இயல்புகள் வெளிப்படுகிறது. ஒரு சராசரி `குடும்ப' பெண்ணாக இரு என சக்திக்கு சிவா அழுத்தம் கொடுக்க, It is my choice என தன் விருப்படி தான் வாழ முடியும் என சக்தி எகிறி அடிக்க ஆரம்பிக்கிறது மோதல். இந்த மோதல் நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு வரை வந்து நிற்கிறது. சக்திக்கு விவாகரத்து வேண்டும், ஆனால் சிவாவுக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை. இவர்கள் சேர்ந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே கதை.

Rio Raj, Malavika Manoj

யுனிவர்சல் டாப்பிக்கான கணவன் மனைவி சண்டையில், இப்போது பெண்ணியம் எப்படி கையாளப்படுகிறது? ஆண்கள் ஏன் பெண்களை புரிந்து கொள்வது இல்லை? குடும்ப வாழ்வுக்குள் தம்பதிகள் எப்படி பிரச்சனைகளை கையாள வேண்டும்? போன்ற விஷயங்களை, காமெடி கலந்து விவாதிக்க முயன்றிருக்கிறார் கதாசிரியர் சிவக்குமார் முருகேசன். அதில் கருத்து தெளிவாக வருகிறதோ இல்லையோ, காமெடி மிஸ் ஆக கூடாது என தீவிரமாக உழைத்து திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் கலையரசன் தங்கவேல்.

Rio Raj, Vigneshkanth

நடிகர்கள் தான் படத்திற்கு பெரிய ப்ளஸ். ரியோ ராஜ் இதுவரை நடித்த படங்களை விட, இந்தப் படத்தில் பக்காவாக செட் ஆகி இருக்கிறார். பாத்திரமும் அவரது நடிப்பு மீட்டருக்கு பொருந்துவதால் பல காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. மாளவிகா மனோஜ் காதல், குழப்பம், தவிப்பு என பல உணர்வுகளை காட்டும் வேடம். அதனை சரியாக செய்திருக்கிறார். இதில் இன்னொரு சர்ப்ரைஸ் விக்னேஷ் காந்த். பல படங்களில் ஓவர் ஆக்டிங் செய்பவர் மிக அமைதியாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார். படத்தின் பெரிய பலம் ஜென்சன் திவாகர். அவர் வருவதே படத்தின் இரண்டாம் பாதியில் தான். ஆனால் அவர் வரக்கூடிய ஒவ்வொரு காட்சியிலும் சிரிப்பு சரவெடியை கொளுத்துகிறார். அதிலும் டிடெக்டிவ் சார்ந்த காட்சிகள் எல்லாம் பங்கம். 

Rio Raj, Jenson

மாதேஷ் மாணிக்கம் இந்தப் படத்தின் உணர்வுக்கு தகுந்த மாதிரி, கலர்ஃபுலாக காட்சிகளை கொடுத்திருக்கிறார். காமெடி எமோஷன் என படத்தின் உணர்வுகளை கடத்த கூடுதல் பலம் சேர்க்கிறது சித்துகுமாரின் பின்னணி இசை. அத்தான் பாடல் மற்றும் விஷுவல் ஐடியா அட்டகாசம். வருண் கே ஜி சொல்ல வேண்டியதை நறுக்கென தொகுத்திருக்கிறார். இது மார்ட்டன் டே திருவிளையாடல் என்பதை குறிக்கும் படி, ஹீரோ, ஹீரோயினுக்கு சிவா, சக்தி எனப் பெயர் வைத்திருந்ததும் சிறப்பு.

Rio, Malavika

இப்படத்தின் குறை என்றால், படம் சொல்லும் கருத்துகள் தான். ஆண் - பெண் பிரச்சனையை பேசுகிறேன் எனத் துவங்கிவிட்டு முழுக்க ஆண்களின் சார்பாக மட்டுமே பேசி இருக்கிறது படம். "இப்போதான் எல்லாத்துக்கும் மெஷின் வந்துருச்சே, ஸ்விட்ச் போட இவளுகளுக்கு வலிக்குது" என ரியோ சொன்னதும், "ஸ்விட்சை கூட பொண்ணுங்க தான் போடனும்ல தம்பி" என தீபா கேட்கும் இடம் மட்டுமே படத்தில் தெளிவு இருந்த இடம். அதுதான் பெண்ணுக்கு ஆதரவாக ஒரு வசனம் வைத்து விட்டோமே என மற்ற இடங்களில் எல்லாம் ஆண்கள் எவ்வளவு பாவம் தெரியுமா? கல்யாணம் செய்து எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா? என வீம்பாக ஆண்கள் மீது பச்சாதாபத்தை கோருகிறது படம். 

ஒரு ஜாலியான படமாக சிறப்பாகவே இருக்கிறது, சொல்லப்பட்டிருக்கும் கருத்திலும் கவனம் இருந்திருந்தால் கொண்டாடி இருக்கலாம்.

பின் குறிப்பு:

இப்படத்தில் பேசப்பட்டிருக்கும் பல விஷமமான கருத்துக்களை எடுத்து பேசி நேர விரயம் செய்யாமல், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லலாம். இங்கு ஒரு ஆணுக்கு திருமணமும், குடும்பம் நடத்துவதும் தான் பிரச்சனை என்றால், அவனால் திருமணம் செய்யாமல் ஒரு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். அவன் எதிர்கொள்ளும் கேள்விகள் மிகச்சில தான். அதே சூழல் இங்கு ஒரு பெண்ணுக்கும் இருக்கிறதா? அப்படியான ஒரு சூழலை உருவாக்கிவிட்டு இது போன்ற படங்களை எடுங்கள்.