மூன்று நண்பர்கள் - மூன்று திருடர்கள் இடையே பிரபஞ்சம் ஆடும் ஆட்டமே 'ஆகக் கடவன'
ஆதித்யா (ஆதிரன் சுரேஷ்), விக்கி (சி ஆர் ராகுல்), புகழ் (ராஜா சிவா) மூவரும் நண்பர்கள். மெடிக்கலில் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள். அந்தக் கடையின் உரிமையாளர் கடையை விற்க முடிவெடுக்க, அதை அவர்களே வாங்கிக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அதற்காக அவர்கள் சேமித்து வைத்த பணம் திருடப்படுகிறது. ஆனாலும் கடைக்கான பணத்தைப் புரட்ட ஊருக்குச் சென்று சொத்தை விற்க கிளம்புகிறார் ஆதித்யா, அவருடன் இரு சக்கர வாகனத்தில் துணையாகச் செல்கிறார் விக்கி. இந்தப் பயணத்தின் போது அவர்களது வண்டி பஞ்சராக, அதைச் சரி செய்யக் காட்டு பாதையில் இருக்கும் ஒரு பஞ்சர் கடைக்குச் செல்கிறார்கள். அங்கே இருக்கும் நபர்களுடன் சின்ன சின்ன உரசல் ஏற்பட, ஒருகட்டத்தில் உயிரை பறிக்க துரத்துகிறார்கள், பஞ்சர் கடை ஆட்கள். அது ஏன்? உண்மையில் அவர்கள் யார்? இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே 'ஆகக்கடவன' படத்தின் கதை.
எல்லாவற்றையும் நிதானத்தை கடைபிடிக்கும் ஆதிரன் சுரேஷ், தன் மனநிலையை நடிப்பில் கொண்டுவர தீவிரமாக முயற்சிக்கிறார். ஆனாலும் அவர் முயற்சி எடுபடவில்லை. எல்லாவற்றுக்கும் கோபப்பட்டு சண்டை பிடிக்கும் கதாபாத்திரத்தில் சி.ஆர்.ராகுல் நடிப்பில் ஓரளவு பரவாயில்லை. பஞ்சர் கடை ஊழியராக அறிமுகமாகும் சதீஷ் ராமதாஸ் படபட எனப் பேசுவதும், நாசூக்காக வருபவர்களை கையாள்வதுமாக கவனத்தை ஈர்க்கிறார். வில்லன்களாக வின்சென்ட், மைக்கல் ஆகியோர் உர் என மூஞ்சியை வைத்திருக்கிறார்கள். மற்றபடி பெரியதாக கவரவில்லை.
லியோ வி. ராஜா ஒரே இடத்தில் நிகழும் கதையை ஒளிப்பதிவில் சுவாரசியமாக கொடுக்க பெரியதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமெச்சூர்தனமே அதிகம் எட்டி பார்க்கிறது. சில இடங்களில் சுமித் பாண்டியன் - பூமேஷ் தாஸ் கூட்டணி படத்தொகுப்பில் கவனிக்க வைக்கிறார்கள். சந்தான அனேபஜகனின் பின்னணி இசையில் பெரிய குறை ஏதும் இல்லை.
படத்தில் மிகப்பெரிய குறையே ஹீரோ - வில்லன் என எவரின் கதையிலும் நமக்கு ஒரு பிடிப்பே ஏற்படவில்லை. ஹீரோ குழுவுக்கு எப்படியாவது பணம் கிடைக்க வேண்டும் என்றோ, வில்லன் குழு மீது வெறுப்பு என எதுவும் நமக்கு தோன்றவில்லை. நம் ஒவ்வொருவரின் செயலும், சொல்லும் இன்னொருவரை பாதிக்கும், அதுதான் ‘பிரபஞ்ச விதி’, 'வார்த்தைகளின் சக்தி' போன்ற தியரி சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கான தொடர்பு திரைக்கதையில் வரும் விதம் துளியும் அழுத்தம் இல்லாமல், வலிந்து செய்யப்பட்ட திணிப்பகவே இருக்கிறது.
அறிமுக இயக்குநர் தர்மா, ஐடியாவாகப் புதுமையான விஷயத்தை எடுத்திருந்தாலும், திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் தடுமாறியிருக்கிறார். ஒன்று இதில் ஒரு குறும்படத்துக்கான விஷயங்கள் மட்டுமே உள்ளது. இல்லை ஒரு முழுநீள படத்துக்கான மெனக்கெடல் எதுவும் எழுத்தில் இல்லை.
மொத்தத்தில், சின்ன ஒரு குழுவின், புது முயற்சியாக, 'ஆகக் கடவன' கவனம் ஈர்க்கிறது. ஆனாலும் அதில் உள்ள போதாமைகள் சரி செய்யப்பட்டிருந்தால் நிறைவான ஒரு சினிமா அனுபவமாக இருந்திருக்கும்.