ப்ரித்விராஜ் Aadujeevitham
ப்ரித்விராஜ் Aadujeevitham ப்ரித்விராஜ் Aadujeevitham
திரை விமர்சனம்

Aadujeevitham Review | நாம் எல்லோரும் ஒரு வகையில் இந்த ஆடுகள் தானோ... ஆடுஜீவிதம் ஒரு பார்வை..!

Johnson

கேரளாவைச் சேர்ந்த நஜீப் (ப்ரித்விராஜ்) புதிதாக திருமணமானவர். குடும்பத்தின் நிதிச் சிக்கலை சமாளித்து, ஒரு வீடு, எதிர்காலம் குறித்த அச்சம் இன்றி ஒரு வாழ்க்கை வாழ நினைக்கிறார். சவுதி சென்று சம்பாதிக்க வாய்ப்பு வரவே, அதற்கு தேவையான பணத்தைப் புரட்டித் தயாராகிறார். தன் ஊரைச் சேர்ந்த ஹக்கிம் (கோகுல்) உடன் விமானம் ஏறுகிறார். சவுதி விமான நிலையத்தில் தங்களை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை எனக் குழப்பத்துடன் நிற்கிறார்கள் நஜீபும், ஹக்கிமும். திடீரென வரும் ஒரு நபர் இருவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு செல்கிறார். உதவியாளர் பணி, ஏசி அறை, நல்ல உணவு, குடும்பத்துக்கு அனுப்ப சம்பளம் எனப் பல கனவுகளோடு பயணத்தைத் துவங்கும் இருவருக்கும், அது ஒரு கொடுங்கனவாக முடிகிறது. இருவரையும் பாலைவனத்தில் இறக்கிவிடுகிறார் அந்த நபர். ஆடுகளை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதன் பின் என்ன ஆகிறது என்பதே படத்தின் மீதிக் கதை.

உங்களில் பலருக்கு, இது மிகப்பிரபலமான ஆடுஜீவிதம் நாவலின் சினிமா வடிவம் எனத் தெரிந்திருக்கலாம். அந்த நாவல் நிஜத்தில் பாலைவனத்தில் சிக்கிக் கொண்ட நஜீபின் வாழ்க்கையத் தழுவி உருவானது. இதை சினிமாவாக்க வேண்டும் பல வருட கனவை நனவாக்கி சாதித்திருக்கும் இயக்குநர் ப்ளஸ்சி மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

படத்தின் முதல் ப்ளஸ் கண்டிப்பாக ப்ரித்விராஜின் நடிப்பு. வாழ்நாளில் ஒரே ஒருமுறை கிடைக்கும் பாத்திரம் என்பதை உணர்ந்து நடித்து அசத்துகிறார். ஒற்றை ஆளாக படம் முழுவதையும் தாங்குவது அவர் தான். கிராமத்தில் தன் மனைவியிடம், தங்களது வருங்காலம் குறித்து பேசுவது, பிழைப்புக்காக வேலை கேட்டு கெஞ்சுவது, பாலை வனத்தில் இறக்கிவிட்டதும் எதுவும் புரியாமல் குழம்புவது, கடைசியில் விரக்தியாகி அடிமை வாழ்வுக்குப் பழகுவது எனப் பல இடங்களில் தனது நடிப்பால் முத்திரை பதிக்கிறார். நாம் யாருடன் அதிக நேரம் ஜீவிக்கிறோமோ, அவர்களாகவே சமயங்களில் மாறிப் போவோம். அப்படியாக ஆடாகவே மாறிப்போகிறார்கள் நஜீபும், ஹக்கீமும். நஜீபின் எஜமானர்களாக தலிப், ரிக் அபி, உடன் பயணிப்பவர்களாக ஜிம்மி, கோகுல் போன்றோரின் நடிப்பும் சிறப்பு. சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் மனதில் பதிகிறார் அமலா பால்.

இந்த படம், முழுக்க நஜீப் பற்றியது என்பதால், அவர் கேரள வாழ்வு எத்தகையது எனச் சொல்லும் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகிறது. அவை பசுமையும், நீரும் சூழ்ந்த நிலப்பரப்பில் வாழ்ந்த ஒருவன், வறண்டு போன நிலத்தை வந்தடையும் பயணத்தை உணர்வு ரீதியாகக் கடத்துகிறது. கேரளாவில் நஜீபின் காட்சிகள் அனைத்திலும் நீர் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறும், அதுவே நஜீபின் பாலை வாழ்வில் நீர் ஒரு எட்டாக்கனியாக இருப்பது போன்ற முரணையும் இதன் மூலம் தெளிவாகக் காட்டுகிறார் ப்ளஸ்சி.

விஷுவலாகவும் படம் மிகத் தரமானதாக உருவாகியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுனில் கே எஸ் வெறும் மணல் பிரதேசத்தை, தனது சுவாரஸ்யமான கோணங்கள் மூலமாக அழகுபடுத்துகிறார். மணல் புயல், ஒட்டகத்தின் கண்ணில் தெரியும் பிம்பம், கேரளத்தின் பசுமை, மழை என எல்லாவற்றிலும் அத்தனை உழைப்பு. படத்தின் இன்னொரு பலம் ஏ ஆர் ரஹ்மானின் இசை. ஓமணே, Istigfar, பெரியோனே என அத்தனை பாடல்களும் இதம். பின்னணி இசை மூலமாக காட்சிகளின் உணர்வை இன்னும் அதிகப்படுத்துகிறார்.

படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இது நஜீப் அனுபவித்த துயரங்களின் தொகுப்பு மற்றும் அவர் விடுதலையின் மூலம் கிடைக்கும் நம்பிக்கையின் ஒளி என்பது புரிகிறது. ஆனால் ஒரு சினிமாவாக தட்டையான படமாகவே இருக்கிறது. நஜீப் சொந்த ஊரில் பிரச்சனைகள் என்று அரபு செல்கிறார். அங்கும் எதிர்பாரா துன்பத்தில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சியால் இன்னும் துன்பம் சேர்கிறது. இறுதியாக தன்னுடன் வாழ்ந்த அந்த மிருகங்களிடமிருந்து பிரியும் போது அவ்வளவுய் வாஞ்சையுடன் அனைத்தையும் கட்டியணைத்துக்கொள்கிறார். ஆனால், அதற்கு ஈடாக இந்தக் காட்சிகளுக்கான முன் கதைகள் ஏதுமின்றி இருப்பது, ஒருவித வெறுமையைக் கொடுக்கிறது. அதே போல் இப்ராஹிம் கதாபாத்திரத்திற்கு முடிவுரை எழுதுவதாக நினைத்து சில விஷயங்களை மாற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் படத்திற்கு மைனஸாகவே அமைகிறது.

மொத்தத்தில் சிறப்பான நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, மேக்கிக் இருந்தாலும் ஒரு நிஜ வாழ்க்கையின் ஆவணம் என்ற அளவிலேயே நின்று விடுகிறது. ஆனாலும் ஒரு சிறப்பான திரை அனுபவம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.