1947
1947 Twitter
திரை விமர்சனம்

1947 August 16 விமர்சனம் | விடுதலைக்கு பிறகும் சுதந்திரத்திற்காக போராடும் ஒரு கிராமம்! பெற்றதா? இல்லையா?

Johnson

செங்காடு கிராமத்து மக்கள் பருத்தியை எடுத்து, அதை நூலாக திரிக்கும் வேலையில் இருப்பவர்கள். அவர்களை அந்த வேலையில் ஈடுபடுத்தி நூலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறார் பிரிட்டிஷ் அதிகாரியான ஜார்ஜ் (ரிச்சர்ட்). மேலும் அந்த மக்கள் அடிமை மனநிலையிலிருந்து வெளியே வந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார். அதனாலேயே வேலை நேரத்தில் பேசுவதோ, சாப்பிடுவதா, நீர் அருந்துவதோ, இயற்கை உபாதைகளோ என எதையும் செய்யவிடாமல் கொடுமைப்படுத்துகிறார்.

அவர் ஒருபுறம் என்றால் அவரது மகன் ஜஸ்டின் (ஜேசன்) அந்த கிராமத்துப் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார். அதை எதிர்த்து கேள்வி கேட்கவும் அந்த மக்கள் பயப்படுகிறார்கள். எதிர்ப்புக் குரல் வரும் போது அவர்களை கழு மரத்தில் ஏற்றி, அதை ஊர் மக்களை பார்க்கச் செய்து பயத்தை எப்போதும் தக்க வைக்கிறார். இதே ஊர்வாசியான பரமன் (கௌதம் கார்த்திக்), அடிக்கடி கிராம மக்களை போராட சொல்லி தூண்டினாலும், பயந்தபடியே வாழ்நாளை கழிக்கிறார்கள் செங்காடு வாசிகள். இப்படியான கிராமத்தில் சுதந்திரம் கிடைத்தது தெரியாமலேயே, சுதந்திரத்திற்கான ஒரு போராட்டம் துவங்குகிறது. அது ஏன்? ஜார்ஜிடமிருந்து அந்த ஊர்மக்கள் விடுதலை பெற்றார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மிக சுவாரஸ்யமான ஒரு கதைக்களம் இந்தப் படத்தின் முதல் பலம். இயக்குநர் பொன்குமார் அதனை தனது எழுத்து மூலம் நன்றாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். பொதுவாக சுதந்திரம் சார்ந்த படங்களில் தேசபக்தியை சேர்த்து உணர்ச்சிகரமாக்க முயல்வார்கள். ஆனால் இந்தப் படம் தேசபக்தியை தாண்டி மனிதனின் சுதந்திரம் என்ற அடிப்படை விஷயத்தை மையமாக கொண்டிருக்கிறது. அந்த ஊரில் இருக்கும் எளிய மனிதர்கள் அனைவரும் சுதந்திரத்திற்காக ஏங்குவார்கள். அதுவே சுயநலமான மனிதர்கள் அனைவரும் அதிகாரத்தை தக்க வைக்க அல்லது அதிகாரத்தை திரும்பப் பெற முயல்வார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் துவங்கி, ஜமீன், காவலதிகாரி வரை அது நீளும்.

1947

லீட் ரோலில் நடித்திருக்கும் கௌதம் கார்த்தி மையமான ஒரு முக பாவனைகளுடனே வருகிறார். காதலை மறைப்பது, க்ளைமாக்ஸில் மக்களிடம் பேசுவது என ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் கவனிக்க வைக்கிறார். புகழ் வெறும் காமெடி ரோலாக இல்லாமல் ஒரு முக்கியமன பாத்திரம். க்ளைமாக்ஸில் அவரின் ஒரு சீன் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் ரேவதி நல்ல அறிமுகம். நெகட்டிவ் ரோலில் வரும் ரிச்சர்ட், ஜேசன், மதுசூதனன் ராவ் என அனைவரும் மிக டெம்ப்ளேட்டான ஒரு நடிப்பையே வழங்குகிறார்கள்.

சந்தானத்தின் கலை இயக்கம் செங்காடு கிராமத்தை நம்பும்படி கண்முன் காட்டுகிறது. ஒளிப்பதிவாளர் செல்வகுமார் காட்சிகளை தரமாக கொடுத்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் போது இனிமையாய் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. ஆனால் பின்னணி இசை மூலம் காட்சிகளின் உணர்வை கடத்துகிறார்.

1947

படத்தின் முதல் பாதியில் இருக்கும் ஒரளவு சுவாரஸ்யம் இரண்டாம் பாதி வரும் பொழுது முற்றிலும் இல்லாமலே போகிறது. காரணம் முதல் பாதியில் ஆகஸ்ட் 11, 12, 13, 14 ஆகிய நான்கு நாட்களுக்கான சம்பவம், சுதந்திரத்தை நோக்கிய அரசாங்க செயல்பாடுகள், செங்காடு கிராமத்து மக்களின் பின் கதைகள் போன்றவை வருகிறது. இடைவேளை காட்சியில் ஒரு ஹை மொமண்டில் முடிகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகான கதை ஆகஸ்ட் 15 என்ற ஒரு தினம் மட்டுமே. அதில் பிரிட்டிஷ் அதிகாரி ஜார்ஜிடமிருந்து அந்த கிராமத்து மக்கள் தப்பினார்களா? இல்லையா? என்ற ஒரு விஷயம் மட்டுமே சொல்ல இருக்கிறது. ஆனால் அதில் சுவாரஸ்யமான காட்சிகளோ, திருப்பமோ இல்லாததால் படம் அயர்ச்சியைத் தருகிறது.

கதையில் படத்தை சுவாரஸ்யப்படுத்த இந்தக் கதையினூடகவே இருக்கும் கிளைக் கதைகளும் இருந்தது. 20 வருடங்களாக பேசிக்கொள்ளாத கணவன் மனைவி, 10 வருடங்களாக தன் மகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டு, அவள் இறந்துவிட்டதாக ஊருக்கு சொல்லும் தந்தை, தங்கள் மகள்களை காப்பாற்ற அந்த ஊரில் இருக்கும் தாய்மார்கள் செய்யும் விஷயம் என அனைத்துமே இருந்தது. ஆனால் அவற்றின் மூலம் கதையை வலுப்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. வெறுமனே எல்லாம் வெறும் வசனங்கள் மூலமாக மட்டுமே சொல்லப்படுகிறது. ஒரு கதைக் களமாக வித்தியாசமான லைனைப் பிடித்திருக்கும் இயக்குநர், படத்தின் காட்சிகளாகவும் திரைக்கதையாகவும் மிக வழக்கமான விதத்தில் கொண்டு சென்றுவிட்டார் என்பதுதான் பிரச்சனை. படத்தின் க்ளைமாக்ஸில் கூட ஹீரோ சென்று மக்களிடம் பேசி அவர்கள் மனது மாறுகிறார்கள் என்பதெல்லாம் டூமச்.

1947

மொத்தத்தில் 1947 சுவாரஸ்மான ஒன்லைன், ஆனால் அதை உருவாக்கிய விதம் மட்டும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் எனச் சொல்லும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி.