நயன்தாரா, ரெஜினா, ஊர்வசி நடித்த ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர் வெளியானதும், அதிலுள்ள CGI, VFX காட்சிகளின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் ட்ரோல்கள் குவிந்துள்ளன. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்துக்கு இது தகுந்த கிராபிக்ஸ் தானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப, முதல் பாகத்தின் எளிமை, காமெடி ட்ரீட்மென்ட் நினைவில் ரசிகர்கள் ஒப்பீடு செய்கின்றனர்.
நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 2020ல் வெளியான படம் `மூக்குத்தி அம்மன்'. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது படம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுந்தர் சி இப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. பரபரப்பாக தயாராகி வந்த இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
நயன்தாரா, ரெஜினா, ஊர்வசி, துனியா விஜய் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தான் இன்று பேசு பொருளாகி இருக்கிறது. இப்படத்தின் VFX மற்றும் கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில், குறிப்பாக கிராபிக்ஸ் பணிகள் அதிக நேரம் எடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் டீசரில் இடம்பெற்றுள்ள சில CGI மற்றும் VFX காட்சிகளின் கிராபிக்ஸ் தரம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. டீசரை பார்த்த சில நெட்டிசன்கள், “இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதுதானா கிராபிக்ஸ்?”, "ஆர் ஜே பாலாஜி க்ரேட் எஸ்கேப்", "முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்மந்தமே இல்லையே", "AI டிரெய்லர் மாதிரி இருக்கு" என டீசரை ட்ரோல் செய்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
அதேவேளையில் இது வெறும் டீசர் தான், படத்தின் முழு VFX பணிகளையும் டீசர் மட்டுமே வைத்து மதிப்பிடக்கூடாது என்றும், திரையரங்க வெளியீட்டில் இறுதி வடிவம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்த பிறகே முடிவு செய்ய வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். முதல் பாகத்தின் வெற்றியால் ‘மூக்குத்தி அம்மன் 2’ மீது ஏற்கெனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது டீசர் கிராபிக்ஸ் குறித்த இந்த ட்ரோல்கள் படக்குழுவுக்கு புதிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, முதல் பாகத்தின் எளிமையான காட்சியமைப்பையும் காமெடி ட்ரீட்மென்ட்டையும் ரசிகர்கள் நினைவில் வைத்திருப்பதால், இரண்டாம் பாகத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திப்படுத்தும் என்பது படத்தின் ரிலீஸுக்குப் பிறகே தெரியவரும்.