1978இல் திரநோட்டம் என்ற திரைப்படத்தில் சைக்கிள் கற்கும் சிறுவன் கதாபாத்திரத்தில் அறிமுகமான மோகன்லால், தென்னிந்திய திரையுலகில் ஏற்ற கதாபாத்திரங்கள் பல நெஞ்சம் மறக்க முடியாதவை. நான்கு தசாப்த திரைச்சேவைக்காக அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து தேசிய விருதுகள் மற்றும் பத்ம விருதுகளை பெற்றிருக்கிறார் அவர். நடிப்பு, பாடல், தயாரிப்பு எனப் பல தளங்களில் சிறந்து விளங்கும் மோகன்லாலை மலையாள ரசிகர்கள் லாலேட்டன் என உறவும், உரிமையும் கலந்தே அழைக்கின்றனர்.
திரநோட்டம் படத்தில் அறிமுகமானாலும், 1980ல் வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' திரைப்படம் அவரைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை, அவர் நடிப்பை மட்டுமே நம்பி தனது தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டார்.
முகபாவனைகளிலும், உடல் மொழியிலும் அவர் காட்டும் அசாத்தியத் திறன் அவரை இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக நிறுத்தியுள்ளது. தமிழில் சிறைச்சாலை, இருவர், ஜில்லா உள்ளிட்ட படங்களில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார்.