நடிகர் மோகன்லாலுக்கு இந்திய சினிமாவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை டெல்லியில் நடக்கும் 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருது அறிவிக்கப்பட்ட உடன் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மோகன்லால், பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அவற்றில் முக்கியமான சில கேள்வி பதில்கள் இதோ...
இந்த செய்தி வந்ததும் உங்கள் அம்மாவை சந்தித்து வந்தீர்கள் அதை பற்றி?
"அம்மாவுக்கு இதை பார்க்கவும், நான் அம்மாவை பார்க்கவும் பாக்கியம் இருக்கிறது. அவருக்கு சற்று உடல்நிலை சரியில்லை, பேச சிரமம் இருக்கிறது. ஆனாலும் அவருக்கு நாம் சொல்வது புரியும். அவர் என்னை ஆசிர்வதித்தார்."
இந்த விருது கிடைத்த பின் பலரும் உங்களை வாழ்த்தினார்கள். இயக்குநர் ராம் கோபால் வர்மா, தாதா சாகேப் பால்கேவுக்கு, மோகன்லால் விருது கொடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?
"அவர் எப்போதும் இப்படி தமாஷாக பேசும் நபர் தான். அதை ஒரு பிளாக் ஹுயூமராக தான் நான் பார்க்கிறேன். அவருடன் நான் பணியாற்றிய கம்பெனி படம் கல்ட் படமாக மாறியது. அப்போதிருந்தே அவரின் காமெடி பேச்சுக்கள் எனக்கு தெரியும். அவர் சொன்னதை மிக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை."
இந்த விருது உங்களுக்கு அறிவித்ததை அறிந்த தருணம் எப்படி இருந்தது?
"இப்படி ஒரு விஷயத்தை நம்ப முடியாதல்லவா. ஒரு படப்பிடிப்பில் நான் இருந்தேன். அப்போது பிரைம் மினிஸ்டர் ஆஃபீஸில் இருந்து அழைத்தார்கள். அவர்கள் என்னிடம் சொல்லி, இதை அறிவிக்கட்டுமா என சம்மதம் கேட்ட பின்தான் அறிவிப்பார்கள். இது கனவில் கூட யோசிக்காத ஒரு பெருமை. இப்படியான விஷயங்கள் நடக்கும் போது அந்த தருணம் மிக அரிதானது. எங்கே இன்னொரு முறை சொல்லுங்கள் என நான் கேட்டு நடப்பவை எல்லாம் நிஜம் தானா என உறுதி செய்து கொண்டேன்."
ஓரு நடிகருக்கு கிடைக்கும் உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதுதான். இதைத்தாண்டி ஒரு நடிகர் சாதிக்க வேண்டியது என எதுவும் இல்லை, இனி எதற்காக நடிப்பை தொடர்கிறீர்கள்?
இந்தக் கேள்வி வந்ததும் சிரித்த மோகன்லால், கலகலப்பாக, "ஐயோ அப்படியா? இனிமேல் நான் என்ன செய்வேன். எனக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாதே. இதுவே உச்சம் என எதுவும் இல்லை. இதை ஒரு அங்கீகாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாளை இருந்து மோகன்லால் என்ற நடிகனை பிடிக்கவில்லை என கூறிவிட்டால், எந்த மரியாதையும் வந்து காப்பாற்றாது. எனவே என் மரியாதையை கெடுத்துக் கொள்ளாத ஒரு நடிகனாக இருக்கவே விருப்பம்.
இவ்வளவு புகழ் கிடைத்தும் எப்படி எளிமையாக இருக்கிறீர்கள்?
"நாம் உயரத்தில் ஏறும் போது, நம்மை உயர்த்திவிட்ட நபர்களையும் மதிக்க வேண்டும். அப்போதுதான் கீழே வரும் போதும் நம்மை பாதுகாப்பாக இறக்கி விடுவார்கள்"