கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளரிடம் நடிகர் மோகன் லால் கோபமாக நடந்துகொண்டார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கி றார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பிஷப் மறுத்தார்.
இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்தும் ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் வாடிகன் தலையிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார். இந்நிலையில் கன்னியாஸ் திரியின் புகார் தொடர்பாக விசாரித்த மெஷினரீஸ் ஆப் ஜீசஸ் திருச்சபை, அவரது புகாரை நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஜலந்தர் மறைமாவட்ட நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் பிஷப். அவரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் விஸ்வசாந்தி அறக்கட்டளையின் சார்பாக, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகர் மோகன் லால். அவரிடம் கன்னியாஸ்திரிகளின் போராட்டம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த மோகன்லால், ‘இங்கு நல்ல விஷயம் நடந்துகொண்டிருக்கும்போது இப்படி தேவையில்லாத கேள்விகேட்க உங்களுக்கு வெட்கமாக இல் லையா? இங்கு நடப்பதற்கும் கன்னியாஸ்திரி பிரச்னைக்கும் என்ன சம்பந்தம்? இங்கு பெரும் பேரழிவு (மழை வெள்ளம்) நடந்திருக்கிறது, நீங்கள் எதையோ கேட்கிறீர்கள்?’ என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.