எம்ஜிஆர்
எம்ஜிஆர் pt web
சினிமா

டிச.24,1987.. அலைகடலாய் கூடிய கூட்டம்.. கண்ணீரில் மிதந்த மெரினா! ஏழைகளின் இதயங்களில் வாழும் MGR!

Angeshwar G

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். சுருக்கமாக எம்.ஜி.ராமச்சந்திரன். அரசியல் தலைவர்களுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் அவர் பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், வாத்தியார், இதயக்கனி இன்னும் பல.

escapist entertainment என்று சொல்வார்கள். அதாவது, யதார்த்தத்தில் இருந்து சில நாழிகைகள் விலகி வேறொரு பொழுதுபோக்கில் தங்களை மூழ்கடித்துக் கொள்வது. அன்றாடம் உழைக்கும் மக்களுக்கு இத்தகைய திரைப்படங்களின் தேவை என்றுமிருக்கிறது. இதை கச்சிதமாக பயன்படுத்திய எம்.ஜி.ஆர். தனது திரைவாழ்வில் இந்த formulaவைக் கொண்டு அதிகமாக வெற்றிகளைக் கொடுத்தவர். உதாரணமாக, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா, உலகம் சுற்றும் வாலிபன், மாட்டுக்காரவேலன் இன்னும் பல.

எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நாயகன் சொக்கத்தங்கம். ஏழைகளுக்கு தேடி தேடி உதவும் நபர், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவர், உண்மையை மட்டுமே பேசுபவர், தீமைகளைக் கண்டால் பொங்குபவர் என தனக்கென உருவான ஒரு பெயரை திரைப்படங்களில் இறுதிவரை கைகொண்டவர்.

இந்த பெயர் அவரது மரணத்தை கடந்து தற்போது வரை தொடர்கிறது. மக்களைப் பொறுத்தவரை திரையில் இருப்பவரும், நிஜ வாழ்வில் இருப்பவரும் உண்மையான எம்.ஜி.ஆர் தான். திரைப்பட பாடல்கள் பாடலாசிரியருடையதோ அல்லது இசையமைப்பாளருடையதோ அல்ல. அது எம்.ஜி.ஆருடையது. தவசி திரைப்படத்தின் காட்சி போல், “தலைவா அந்த கத்தி போனா என்ன, இந்தா அருவாள தூக்கி போடுறேன். பிடிச்சுகிட்டு வளச்சு வளச்சு வெட்டுங்க”. இப்படித்தான் எம்ஜிஆர் மக்கள் மனதில் பதிந்தார்.

ரத்தத்தை கொடுத்து அதில் வந்த பணத்தின் மூலம் படம் பார்த்த ரசிகர்களைக் கொண்ட வரலாறு எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் இருந்தது. ரசிகர்களின் இந்த செயல் தொடர்ந்த வண்ணம் இருக்க தகவல் எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. பார்த்தார் எம்.ஜி.ஆர். நேராக தகவல் வந்த இடத்திற்கு சென்று ரசிகர்களிடமே தனது வருத்தத்தை தெரிவித்தார். அதிலிருந்து அதுபோன்ற நிகவுகள் சற்றே குறைந்தன. பத்திரிக்கையாளர் சோ சொன்னது இங்கே மேற்கோள் காட்டப்பட வேண்டியவை, “அனைத்து நடிகர்களும் ரசிகர்களைக் கொண்டுள்ளனர். எம்ஜிஆருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு”

திரைப்படங்களில் இருந்தது போல் தான் அரசியலிலும். ‘வாத்தியார் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை’ எனும் நூலில் ஆசிரியர் ஆர். முத்துக்குமார் இவ்வாறு எழுதுகிறார்., “சத்துணவுத் திட்டம் என்ற போது எம்.ஜி.ஆரை நோக்கி கைகூப்பிய மக்கள், சாராய பேர ஊழல் வெடித்த போது அதிகாரிகளை நோக்கியே கைகளை நீட்டியிருந்தனர். எம்.ஜி.ஆர் மீது சந்தேகத்தின் நிழல் கூட விழவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையின் மந்திரச்சொல்” அதுதான் எம்.ஜி.ஆர்.

அரசியல் பயணம்.

அண்ணா உருவாக்கிய திமுக பல்வேறு காரணங்களால் இரண்டானது. ஒரு பக்கம் கருணாநிதி; மறுபக்கம் எம்ஜிஆர். புதிய கட்சி. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அண்ணாவின் கொள்கைகளே அதிமுகவின் கொள்கைகள் என்றார் எம்ஜிஆர்.

தொடர்ந்து தேர்தல்., முதல்வர் நாற்காலி. பல விமர்சனங்கள் பல பாராட்டுக்கள். பம்பரமாக சுழல வேண்டிய தேவை எம்ஜிஆருக்கு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சில திட்டங்கள் இன்றும் பாராட்டப்படுகின்றன.

காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக கொண்டு வரப்பட்டது சத்துணவுத்திட்டம். சத்துணவுத் திட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலையும் கிடைத்தது. நூறுகோடியில் செயல்படுத்தப்பட்ட திட்டம் பின் இருநூறு கோடிக்கு விரிவுபடுத்தப்பட்டது.

இதைத் தவிர கைத்தறி நெசவாளர்களின் துயரைப் போக்க அரசே ஆண்டுதோறும் ரூ.200 கோடிக்கு கைத்தறி வேட்டி சேலைகளை கொள்முதல் செய்யும் என அறிவித்தார். கொள்முதல் செய்த துணிகளை ஏழைகளுக்கு பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தார். அத்திட்டம் இன்று வரை தொடர்கிறது.

எல்லாம் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது. அக்டோபர் மாதம் 1984. எம்ஜிஆருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்ற செய்தி அறிந்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை முன்பு பொதுமக்கள் குவிய ஆரம்பித்தனர். சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர், விரதம் இருந்தனர், மொட்டை அடித்தனர். மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லப்பட்டு அங்குள்ள ப்ரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் நல்லபடியாக முடிந்து 4 பிப்ரவரி 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார். தொண்டர்களும் ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர்.

மீண்டும் எல்லாம் சிறப்பாக சென்றது. ஆனால் ஒரு நாள் அதிகாலையில் வந்த அந்த செய்தி ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆம், 24 டிசம்பர் 1987 ஆம் ஆண்டு அதிகாலை 3.30 மணியளவில் எம்.ஜி.ஆர் மரணடமைந்தார் என்ற செய்தி வெளியானது.

எம்ஜிஆரின் முகத்தை இறுதியாக காண வேண்டும் என்று தமிழகம் முழுவதிலும் இருந்தும் கார்கள், பஸ்கள், வேன்கள், லாரிகள் என கிடைக்கின்ற வாகனங்களில் ஏறி மக்கள் சென்னை வந்தனர். பல இடங்களில் கடை அடைப்புகள், சாலைமறியல் போன்ற பல விஷயங்கள் நடந்தது. ராஜாஜி பவனில் கூட்டம் அலைமோதியது.

எம்ஜிஆரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு இடதுபுறமாக அடக்கம் செய்யப்படும் என முடிவெடுவெடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. அண்ணா சாலை , கடற்கரை சாலை மக்கள் திரளால் திணறியது.

மாலை 4 மணியளவில் சந்தனப்பேழைக்குள் எம்ஜிஆரின் உடல் கிடத்தப்பட்டது. மக்களின் அழுகுரலோடு, துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையோடு சந்தனப்பேழைக்குள் வைக்கப்பட்டு சலவைக்கற்களால் மூடப்பட்டது.

இறப்பு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களுக்குத்தான். எம்ஜிஆர் ஓர் சகாப்தம் என்கின்றனர் அவரது ரசிகர்களும், தொண்டர்களும்.