சினிமா

பெஃப்சி பிரச்னை: காலா, மெர்சல் படங்களின் ஷூட்டிங் ரத்து

webteam

பெஃப்சி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் காலா, மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளப் பிரச்னை தொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெஃப்சி தொழிலாளர் சங்கத்தினருக்கும் மோதல் வெடித்துள்ளது. இதனால் பெஃப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களுடனும் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாள‌ர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி ஃபெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ரஜினிகாந்தின் காலா, மெர்சல் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ளதாக தகவல்கள்‌ தெரிவிக்கின்றன. மெர்சல் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பெஃப்சி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் படக்குழுவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

பெஃப்சி தொழிலாளர்களுடன் மட்டுமே தயாரிப்பாளர்கள் பணியாற்ற வேண்டும். ஏற்கனவே இருந்த சம்பள முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளர்கள், தொழிலாளர்களுக்கு இடையேயான பொதுவிதி புத்தகத்தை விரைவில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.