நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தை கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையங்குகளில் வெளியிட தடைகோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பூரைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையங்குகளில் மெர்சல் திரைப்படத்தை வெளியிட தடைகோரி மனுதாக்கல் செய்திருந்தார். அதில், விழாக்காலங்களில் திரைப்படம் வெளியாகும் முதல் ஐந்து நாட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார். மேலும், முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி, உள்துறை, நிலநிர்வாகத்துறை, வணிகம், வருவாய்த்துறை, 8 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு பொது நல நோக்குடன் இருப்பதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன்பு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.