சினிமா

“மெகபூபா.. மெகபூபா.. கருவினில் எனை சுமந்து”.. ஒரே படத்தில் கோடி இதயங்களை வென்ற அனன்யா பட்!

rajakannan

‘கேஜிஎஃப்’ படத்தில் மனதில் நின்ற கதாபாத்திரங்களே கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேல் இருப்பார்கள். அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குநர் பிரசாந்த் நீல் செதுக்கி இருப்பார். அப்படியான மனதில் நின்ற கதாபாத்திரங்களில் ஒருவர் தான் ஆபீஸ் பாயாக வருபவர். முதல் பாகத்தில் பத்திரிக்கையாளர் ஆனந்த் இளவழகன், ஹீரோவையும், கேஜிஎஃப்-ன் ஆரம்ப புள்ளியையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, இந்த ஆபீஸ் பாய்க்கென்று ஒரு அழகான அறிமுகம் செய்து, அந்த கதையோட்டத்தில் நம்முடன் கலக்க வைத்திருப்பார். ஆனந்த் இளவழகன் தன்னுடைய அனுபவத்தை சொல்லிக்கொண்டே வருகையில் ராக்கி பாயின் கதை, திரையில் பார்க்கும் நம்மை மட்டுமல்ல படத்தில் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களையும், அந்த உலகத்தில் கட்டிப் போட்டுவிடுகிறது. அப்படித்தான் அந்த ஆபீஸ் பாய் காதாபாத்திரமும்.

தொடக்கத்தில் பேட்டி எடுக்கும் தீபா ஹெக்டேவிடம் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கு அவர், கதையின் ஒரு கட்டத்தில் ஆக்ரோஷமாகி ‘அவன் ஏன் சார் எதுவும் செய்யல’ என்று எமோஷனலாக கேட்பார். அதுவும் அந்த ஆங்கரை அதட்டி விட்டு கேட்பார். அதேபோல், இரண்டாம் பாகத்தில் ராக்கி தங்கத்தை எடுத்துக் கொண்டு துபாய் சென்றதற்கான காரணம் குறித்து பிரகாஷ் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் அந்த ஆங்கரே புரியாமல் திக்குமுக்காடுவார். ஆனால், கலானிஷிகா என்று துப்பாக்கியின் பெயரை கரெக்டாக சொல்வார் அந்த ஆபிஸ் பாய். அந்த அளவிற்கு அவர், ராக்கி பாயின் கதையில்  ஒன்றிவிடுவார். அதேபோல் தான் ‘கே.ஜி.எஃப்’ படமும் பல பேர் மனதில் தற்போது சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது.

ஒரு திரைப்படத்தை பார்த்தப் பின்னர் உண்மையில் அந்தப் படம் நன்றாக இருந்தால், அதன் தாக்கம் ஒரு சில நாட்களுக்கு நம்முடைய மனதில் இருந்து கொண்டே தான் இருக்கும். கொஞ்ச நாள் கழித்து அந்தப் படத்தின் நினைவுகள் மெல்ல மெல்ல மறைந்துவிடும். ஆனால், அந்த கொஞ்ச நாளைக்கு பிறகும், ஒரு படத்தின் நினைவுகளை மீண்டும் நம்முடைய மனதிற்கு கொண்டு வருவது அந்தப் படத்தின் பாடல்கள்தான். பாடல்கள்தான் ஒரு படத்தை காலம் கடந்தும் பல நேரங்களில் தாங்கி நிற்கிறது. ‘கே.ஜிஎஃப்’ படத்தின் மிகப்பெரிய தூண்களாக இயக்கம், எடிட்டிங், நடிப்பு, டப்பிங் என பல விஷயங்கள் இருப்பினும் ரவி பஸ்ரூரின் இசையே முதலிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் மிகையாக இருக்காது.

அந்த அளவிற்கு பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். கதைக்கு பொருத்தமான, ஏன்.. கதையையே சொல்கிற பாடல்களாகவே அனைத்துமே அமைந்திருக்கும். அந்த பாடல்களுக்கு முக்கியமாக உயிர் ஊட்டியது அந்த குரல்கள்தான். இசையை பொறுத்தவரை பாடகர்களில் அவர்களது மிக முக்கியமான தேர்வு அனன்யா பட்டின் தேர்வுதான். அந்த குரல் தான் தற்போது கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என 5 மொழிகளிலும் பல கோடி மனங்களை தலாட்டி வருகிறது.

“மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்; மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்; தடைகள் எதையும் மகனே வென்று வா; தலையை நிமிர்ந்து பகையை கொன்று வா” மகனுக்கு வீரத்தை விதைக்கு தாயின் உணர்வுகளையும், நான் முழுமதியாய் மாறினேன்; பிறை நினைவால் தேய்கிறேன்; தலைவா என்னை நீ ஆழா வா ; உன் விரால் வருடக் கனவே; எனது இளமை ஏங்குதே அழகா; ஆறுதல் சொல்ல வா” என்று தலைவனின் பிரிவில் வாடும் தலைவியின் ஏக்கத்தையும், அனன்யா பட் தன்னுடைய குரலில் மாயாஜால வித்தையால் நம்மை ஆழமாக உணர வைத்துவிடுகிறார்.

“கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா
பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா
காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது உனக்கே
என் உயிரே ஆரத்தி ..”  இந்த வரிகளுக்கு அனன்யா பட்டின் குரல், அவ்வளவு உயிர்ப்பூட்டியிருக்கும். எத்தனையோ பேரின் மனதில் இந்தப் பாடல் கரைந்து போனதற்கு பாடல் வரிகளின் அழுத்தத்தோடு அவரது குரலின் மென்மையும் ஒரு காரணம்.

தற்போது பல பேரது மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் காதல் பாடல் தான் மெகபூபா பாடல். இந்தப் பாடலில் அவரது குரல் அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. வார்த்தைகளை அவர் உச்சரிக்கும் விதமும், பாடலின் இடையில் அவர் கொடுத்துள்ள ஹம்மிங்கும் செம்ம க்யூட். அவரது குரல் நம்மையும் காதலில் கரைய வைத்துவிடுகிறது. படத்தில் அதிரடியான மாஸ் காட்சிகளுக்கு இடையில் ஜில்லென்ற தென்றல் காற்றாய் இந்தப் பாடல் வந்துபோகும். பாடலில் இடம்பெற்றிருக்கும் அந்த வயலின் இசையும், பாடல் வரிகளும், அனன்யா பட்டின் மயக்கும் குரலும் நம்மை ஒரு நான்கு நிமிடங்கள் வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றுவிடும்.

“வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
இதருணம் மலரும் சுவாசம்
தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா......
மெஹபூப்பா மே தேரி மெஹபூப்பா
மெஹபூப்பா மே தேரி மெஹபூப்பா
மெஹபூப்பா மே தேரி மெஹபூப்பா
மெஹபூப்பா மே தேரி மெஹபூப்பா

பூவைக்கு பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுதே
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா
நெஞ்சில் வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா
வாழ்வின் வேர் நீண்டிடும் காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாலன் நீ தானடா
உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தனிந்தேன் தனிந்தேன் சலனம்
இனி வாழ்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்....
மெஹபூப்பா மே தேரி
மெஹபூப்பா மே தேரி மெஹபூப்பா.. அனன்யா பட் தான் ஐந்து மொழிகளிலும் இந்தப் பாடல்களையெல்லாம் பாடியுள்ளார். எந்த மொழியில் கேட்டாலும் அவ்வளவு இனிமையாக இருக்கிறது. தமிழில்தான் இவ்வளவு இனிமையா என்று பார்த்தால், மலையாளத்திலும் கிறங்க வைக்கிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம் என மொழி கடந்து நம்மை அவரது குரல் வசீகரித்துவிடுகிறது.

கே.ஜி.எஃப் மிகப்பெரிய மாஸ் ஆன திரைப்படம் தான். அவ்வளவு மாஸ் காட்சிகள் படம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், கடைசியில் ராக்கி பாய் கப்பலில் நின்று கொண்டு மரணத்தின் தருவாயில் “மனதில் விதைத்த வார்த்தை நினைவிருக்கும்; மண்ணில் எங்கும் முட்கள் நிறைந்திருக்கும்; தடைகள் எதையும் மகனே வென்று வா” என்று அனன்யா பட் குரலில் வரும் பாடல் தான் எல்லோரது கண்களையும் கலங்க வைத்தது. மிகவும் எமோஷனலாக படத்தை நம்முடன் ஒன்ற வைத்ததே அனன்யா பட் குரல் தான். 

இவரது குரலை தமிழ் படத்தில் எங்கேயே கேட்டது போல் இருக்கிறது அல்லவா?. ஆம், கருப்பன் படத்தில் ‘உசுரே உசுரே நான் தானே’ என்ற பாடலின் மூலம் நம் மனதில் சோகத்தை பிழிய வைத்தவர் இவரேதான். ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டு பாகங்களுக்கு முன்பு வெகு சில படங்களுக்கு மட்டுமே இவர் பாடல்கள் பாடியுள்ளார். ஆனால், இந்தப் படத்தின் இரண்டு பாகங்களிலும் பெண் குரலில் அமைந்த எல்லா வரிகளையும் எல்லா மொழிகளிலும் பாடியுள்ளார்.

அனன்யா பட்டின் குரலில் ஏதோ ஒரு தனித்துவம் நிச்சயம் இருக்கிறது. அந்த தனித்துவத்தை ‘கேஜிஎஃப்’ படக்குழு மிக நன்றாக பயன்படுத்தி இருக்கிறது. அவருக்கு நிச்சயம் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.