சினிமா

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ்

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் : சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ்

webteam

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனில் போட்டோ எடுத்ததால் நடிகை நிவேதா பெத்துராஜ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு செல்போன் எடுத்துச்செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கோயில் வளாகத்திற்கு செல்லும் பக்தர்கள், தங்கள் செல்போனை கோவில் நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். இதற்கு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. யாரேனும் தெரியாமல் போனை உள்ளே எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தீவிர சோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் ‘ஒரு நாள் கூத்து, ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு பிடிச்சவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையான மதுரையைச் சேர்ந்த நிவேதா பெத்துராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது அவர் பொற்றாமரைக்குளம் மற்றும் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து செல்போனில் போட்டோக்கள் எடுத்துள்ளார். கோவிலின் உள்ள இருக்கும் வளையல் கடைகளில் தான் வாங்கிய பொருட்களை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். 

செல்போன் கொண்டு செல்வதற்கு தடை இருக்கும் நிலையில், நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை எப்படி வழங்கப்பட்டது ? என பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிவேதா பெத்துராஜின் பேஸ்புக் பக்கத்தில் பலரும் கேள்விகளை எழுப்பினர். இதனால் தனது ஃபேஸ்புக் பதிவை நிவேதா நீக்கிவிட்டார். இதுதொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.