அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக துள்ளிக்குதித்து ரஜினி அங்கிள்… என்று பாசம் பொங்க அழைக்கும் மீனாவின் மழலைக்குரலை அவ்வளவு எளிதில் நம்மால் மறக்கமுடியாது. பின்னர் மிக அழகான இளம் நடிகையாக வளர்ந்து ரஜினிக்கே ஜோடியாக நடித்தார். இன்று அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜய்யுடன் நடித்து அறிமுகமாகிவிட்டார்.
அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் நினைவுகளை 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீனா நினைவுகூர்ந்துள்ளார். சில படங்களுடன் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். “அன்புள்ள ரஜினிகாந்த் படம் வெளியாகி 36 ஆண்டுகள் கடந்துவிட்டன. தயாரிப்பாளர் தூயவன் அவர்களுக்கு நன்றி. ஒரு கேரக்டரில் நடிக்கமுடியுமா என்று கேட்டார். எந்தவொரு குழந்தை நட்சத்திரமும் மறுக்கமுடியாத கதாபாத்திரம் அது. இதயத்தைக் கவரும் ரோஸி கதாபாத்திரமாக என்னை இயக்குநர் நடராஜ் உருமாற்றினார். அந்தப் படம் முழுவதும் ரஜினிகாந்த், எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகமூட்டினார்.
லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பு நன்றி. அந்தப் படத்தில் வரும் டைட்டில் பாடல் “கடவுள் உள்ளமே…” அவர்தான் பாடினார். நீங்கள் பாடுவதை நான் தவறவிடுகிறேன் அம்மா” என்று மீனா குறிப்பிட்டுள்ளார்.
இன்றுவரையில் மீனாவின் ராஜாங்கம் தொடர்கிறது. சிவா இயக்கும் அண்ணாத்தே படத்தில் ரஜினியுடன் நடித்துவருகிறார்.