media Thrashes south korean actor Kim Soo Hyun in Kim Sae Ron Row  PT
சினிமா

கண்ணீரோடு ப்ரஸ் மீட்.. இளம் நடிகையின் விபரீத முடிவு.. கொரிய நடிகர் கிம் சோஹூயுனை துரத்தும் சோகம்!

"எப்போதுதான் இவற்றை நிறுத்தப்போகிறீர்கள்" - கண்ணீரோடு ப்ரஸ் மீட்.. இளம் நடிகையின் விபரீத முடிவால் சூறாவளியாய் புரட்டிப் போடப்பட்ட கொரிய நடிகர் கிம் சோஹூயுனின் வாழ்க்கை!

பாமா
“ நான்  செய்யாத ஒன்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”“ என்னால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதுவரை ஒரு கோழை போல அமைதி காத்துக்கொண்டிருந்தேன். இனி முடியாது. எந்த தவறும் செய்யாமல் குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது”

கண்ணிலிருந்து பெருகி வழிந்தோடிக்கொண்டிருக்கும் கண்ணீரோடு தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துக்கொண்டிருக்கும் கிம் சோஹூயுன், சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற கொரிய நடிகர். 37 வயதாகும் இவர், தென்கொரியாவின் ஏ –லிஸ்ட் கதாநாயகன். அதிக ஊதியம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் உள்ள கிம் சோ ஹூயுன், கடந்த 2024 ஆம் ஆண்டின் ஹிட் கொரியன் சீரிசான   QUEEN OF TEARS கதாநாயகன். தவிர   “ OK TO BE NOT OKAY” “MY LOVE FROM THE STAR” “HOTEL DE LUNA” என கிம் சோ ஹூயுனின் வெற்றிகரமான சீரிஸ்கள், கொரியனில் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளிலும், நாடுகளிலும் வரவேற்பை பெற்றவை.


கொரியன் தொடர்களை விரும்பிப் பார்ப்போருக்கு மிகவும் பரிச்சயமானவர் கிம் சோ ஹூயுன்…திரையில் உருகி உருகி காதலிக்கும் கிம் சோ ஹூயுனின் பல சீரிஸ்கள், திரைப்படங்கள் அவரை ஒரு லவ்வர் பாயாக, இப்படி ஒரு கணவரோ, காதலரோ நமக்கிருக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை பெண்களிடையே ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும். மென் சோகமும், வலி மிகுந்த சிரிப்பும் இவரது டிரேட் மார்க். இவருக்கான ரசிகர்கள் வட்டம் மிகப்பெரியது. இன்ஸ்டாவில் மட்டும் இவரை 2 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

இத்தகைய புகழின் உச்சத்தில் இருக்கும் இந்த நடிகரைத்தான் இப்போது வறுத்தெடுத்துக்கொண்டிருக்கின்றன கொரிய ஊடகங்கள்.. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் முன்பாக, 2025 பிப்ரவரி 16 ஆம் தேதி நடந்த சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும். அந்த நாளில், கொரியாவின் இளம் நட்சத்திரமான கிம் சே ரோன் என்ற 24 வயது நடிகை தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைகள் அதிகம் உள்ள நாடுகளில் முன்னிலையில் உள்ள தென்கொரியாவில் கிம் சே ரோனின் தற்கொலையும் பேசுபொருளானது.

கொரிய இளம் நடிகையின் தற்கொலை

ஒன்பது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது Kim Sae-ron -க்கு கனவுகள் அதிகம் இருந்தன. கொரிய திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாகிவிட வேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டார் இந்த பெண். 2010 ஆம் ஆண்டு The Man from Nowhere படம் இவருக்கு பெரும் புகழை கொடுத்தது. கடத்தப்பட்ட குழந்தையாக அதில் கிம் சே-ரோன் நடித்திருந்தார். அந்த ஆண்டின் கொரிய திரைப்பட விருதுகள் விழாவில் கிம் சே ரோன் சிறந்த புதுமுக நடிகையாக விருது பெற்றார்.


2000மாவது ஆண்டில் பிறந்த கிம் சே ரோனுக்கு The Man from Nowhere பெரிய அடையாளத்தைகொடுத்தது. தொடர்ந்து Listen to My Heart , A Girl at My Door, The Queen's Classroom, Hi! School: Love On, Secret Healer என திரைப்படங்களும், சீரிஸ்களுமாக வாய்ப்புகள் குவிந்தன.

போதையில் கார் ஓட்டி விபத்து-நடிகையை விமர்சித்த நெட்டிசன்ஸ்

2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் இவரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதோடு, விபத்தையும் ஏற்படுத்தியிருந்தார் கிம் சே ரோன். இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  இந்த சம்பவம் அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.  கிம் சே ரோனை திட்டித்தீர்த்த சமூக ஊடகங்களும், இணைய பக்கங்களும் அவர் என்ன செய்தாலும் விமர்சிக்க ஆரம்பித்தன. 2023 ல் வெளிவந்த Bloodhounds சீரிஸ்தான் கிம் சே ரோன் நடித்த கடைசி தொடராகியது.

விபத்துக்குப்பிwகு தோழிகளோடு பார்ட்டிக்குச் சென்றாலும், வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அவரது ஒவ்வொரு அசைவையும் கேலி செய்தும், விமர்சித்தும் யூ ட்யூபர்களும், வலைதளவாசிகளும் வருமானத்தை குவித்துக்கொண்டனர். இதனால் இவருக்கு திரை வாய்ப்புகள் நின்று போயின. தனது வலைதள பக்கத்தில் வருத்தம் தெரிவித்த பின்பும் ட்ரோலிங் தொடர்ந்த நிலையில் ஒரு கட்டத்தில், "எப்போதுதான் இவற்றை நிறுத்தப்போகிறீர்கள்" என்று மனம் வெதும்பி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டார் கிம் சே ரோன்.

ஒரு கட்டத்தில் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளான கிம் சே ரோன், தனது பெயரை மாற்றிக்கொண்டு ஒரு கஃபேயில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் விதி விடவில்லை. அவரை அடையாளம் கண்டு அவரது புகைப்படத்தை பதிவிட்டு கேலிகள் தொடர்ந்தன. மீண்டும் தன்னை தேற்றிக்கொண்டு திரை வாய்ப்புகளை இவர் தேடி வந்தார். இந்த சமயத்தில்தான் கிம் சே ரோன் தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்ள தேர்ந்தெடுத்த நாளான பிப்ரவரி 16, நடிகர் கிம் சோ ஹூயுனின் பிறந்தநாள்.

நடிகையின் தற்கொலை – உச்ச நடிகருக்கு நெருக்கடி

முதலில் இந்த தற்கொலை ட்ரோலிங்காலும், பட வாய்ப்புகள் இல்லாததாலும் என பேசப்பட்ட நிலையில், ஒரு திருப்பம் நிகழ்ந்தது. சரியாக ஒருமாதம் கழித்து கிம் சே ரோனின் குடும்பத்தினர் அந்த புகாரை கூறினர். நடிகர் கிம் சோ ஹூயுன் காதலித்து கைவிட்டதால்தான் கிம் சே ரோன் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியதோடு மட்டுமின்றி, அதற்கான ஆதாரங்களாக இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டனர். அத்துடன் இல்லாமல், நடிகை கிம் சே ரோன் 15 வயதாக இருந்தபோதில் இருந்து கிம் சோ ஹூயுன் அவரை காதலித்ததாக கூறிய உடன் அனைத்து ஊடகங்களும் நடிகர் கிம் சோ ஹூயுனை நோக்கித் திரும்பிவிட்டன.

மைனரான ஒரு பெண்ணை அவரை விட அதிக  வயதுள்ள கிம் சோ ஹூயுன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக அனைத்து ஊடகங்களும் திரண்டெழுந்துவிட்டன. ஒவ்வொரு ஊடகமும் தங்கள் பாணியில் ஊடகவிசாரணை நடத்த ஆரம்பித்துவிட்டன. இதனால் சமூக வலைதளங்களில் கிம் சோ ஹூயுன் மிகக்கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். உச்ச நடிகரான கிம் சோ ஹூயுனின் ஸ்பான்சர்கள் ஒவ்வொருவராக விலகிக்கொள்ளத் தொடங்கினர்.

மைனர் பெண்ணை காதலித்தாரா கிம் சோ ஹூயுன்?

ஒவ்வொரு புகைப்படமும் வெளியாக, வெளியாக, கிம் சோ ஹூயுனுக்கு நெருக்கடி அதிகரித்தது. அவர் சிஇஓ ஆக உள்ள THE GOLDMEDALIST நிறுவனம் அவர் சார்பில் இந்த புகார்களை மறுத்தது. ஒவ்வொரு புகைப்படத்துக்கும் விளக்கங்கள் தந்தது.  மைனர் பெண்ணை கிம் சோ ஹூயுன் காதலிக்கவில்லை. இருவரும் 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை மட்டுமே காதலித்தனர் என்றும், பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் நடிகரின் நிறுவனம் விளக்கம் அளித்தது. தங்கள் நிறுவனத்திடம்  நடிகை கிம் சே ரோன் வாங்கிய கடனை திருப்பித்தர நெருக்கடி தரப்படவில்லை என்றும், அந்நிறுவனம் விளக்கியது.

மவுனம் கலைத்த கொரிய நடிகர் –கண்ணீருடன் விளக்கம்

இந்த நிலையில்தான் திடீரென செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்திய கிம் சோ ஹூயுன், தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.  என்னால் பலர் வருந்துவதாகவும், இறந்த கிம் சே ரோனின் ஆன்மா கூட அமைதியில் நிலைத்திருக்காது என்றும் வருந்தி கூறிய கிம் சோ ஹூயுன், மைனர் பெண்ணை தான் ஒருபோதும் காதலிக்கவில்லை என்றும், இருவரும் நடிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதைத்தவிர, மற்ற காதலர்களைப் போலத்தான் இருந்ததாகவும் கிம் சோ ஹூயுன் விளக்கம் அளித்துள்ளார்.

 2024 ஆம் ஆண்டு தனது இன்ஸ்டா பக்கத்தில் கிம் சே ரோன், தாங்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பின் நீக்கியபோது, தனது க்யூன் ஆஃப் டியர்ஸ் சீரிஸ் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததால் தனது காதலை மறுத்ததாக கிம் சோ ஹூயுன் கூறியுள்ளார்.

தனது ஒராண்டு காதலை வெளிப்படுத்தினால் ஒட்டுமொத்த குழுவும் பாதிக்கப்படும் என்பதால் அதனை அப்போது மறுத்ததாக கூறிய கிம் சோ ஹூயுன், ஓராண்டிலேயே முறிந்துவிட்ட உறவு தன்னை சிக்கலில்கொண்டு நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

கண்ணீர் வழிந்தோட குரல் நடுங்க, கிம் சோ ஹூயுன், தனது தரப்பை கூறினார். 5 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்து ஓராண்டிலேயே பிரிந்துவிட்ட ஒரு காதலை ஊடகங்கள்  தோண்டியெடுத்து கிம் சோ ஹூயுனை குற்றவாளி கூண்டில் நிறுத்தியிருக்கின்றன.  

நடிகரின் கண்ணீரை விமர்சித்தும் ட்ரோலிங்

கிம் சோ ஹூயுனின் இந்த கண்ணீரையும் இப்போது சமூக ஊடகங்கள் விமர்சித்துவருகின்றன. க்யூன் ஆஃப் டியர்ஸ் கதாநாயகன், நிஜத்தில் கிங் ஆஃப் டியர்சாக மாறிவிட்டார் என்றும், அவருக்கு ஆஸ்கர் விருதே தர வேண்டும் என்றும் கேலிகள் பறக்கின்றன. இந்த போலி கண்ணீரை நம்ப வேண்டுமா என்றும், இது க்யூன் ஆஃப் டியர்ஸ் சீசன் 2 ஆ என்றும் கிண்டல்கள் தொடர்கின்றன.


ஆனால், இத்தனை ஆண்டுகள் அந்த குடும்பம் என்ன செய்து கொண்டிருந்தது. நடிகை கிம் சே ரோன், திரைவாய்ப்புகள் இல்லாமல் கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்தபோது அவரது குடும்பம் அவரை கவனிக்காதது ஏன்? அதிக ஊதியம் வாங்கும் நடிகராக இருப்பதால் பணம் பெறுவதற்காக திடீரென புகைப்படங்களை காட்டி அவரை மிரட்டுவதா என்றும் நடிகர் கிம் சோ ஹூயுனின் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தனது தற்கொலைக்கு நடிகர் கிம் சோ ஹூயுன்தான் காரணம் என்று நடிகை கிம் சே ரோன் எங்கும் குறிப்பிடவில்லை. அவரது தற்கொலை குறிப்பு என்று எதுவும் இல்லை. இதனால் நெட்டிசன்களின் கற்பனைகள் தறிகெட்டு பறக்கின்றன. யூகங்களும், சித்தரிப்புகளும்,  ரெக்கை கட்டி பறக்கின்றன.

இதற்கு மத்தியில் நடிகை கிம் சே ரோன், ரகசியமாக வேறொருவரை திருமணம் செய்துகொண்டதாகவும், அந்த நபர் கிம் சே ரோனை துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.

பொய்யான திரிக்கப்பட்ட தகவல்களை கூறி நன்மதிப்பை கெடுத்த்தாக நடிகை கிம் சே ரோனின் குடும்பம் மீது நடிகர் கிம் சோ ஹூயுனின் நிறுவனம் 80 லட்சம் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.  

வன்மத்தை உமிழும் சமூக வலைதளங்கள்

கண்ணீரோடு கிம் சோ ஹூயுன் நடத்திய செய்தியாளர் சந்திப்புக்குப்பின் அவரது ரசிகர்கள் அவருக்காக சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகிறார்கள். நடிகர் கிம் சோ ஹூயுனை தற்கொலை நோக்கி தள்ளுகிறீர்களா? அவரும் தற்கொலை செய்துகொண்டால்தான் உங்கள் கேலிகள் அடங்குமா என்று கேட்கும் ரசிகர்கள், இதுவரை பேசாமல் அமைதி காத்ததற்காக கிம் சோ ஹூயுனை திட்டிய சமூக வலைதளங்கள் அவர் வெளிவந்து பேசியதும் ஏன் வன்மத்தை உமிழ்கின்றன என்றும் வினவுகிறார்கள்.

தென்கொரியாவில் பிரபலங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் ஊடக வெளிச்சத்துக்கு உள்ளாகின்றன. அவர்களின் காதலும், தனிப்பட்ட வாழ்க்கையும் பெருந்தீனி போல நெட்டிசன்களுக்கு விருந்தாகி விடுகின்றன. பிப்ரவரியில் நடந்த ஒரு தற்கொலை இரண்டு மாதங்களாக தென்கொரிய சமூக ஊடகங்கள் பணம் பண்ணுவதற்கான பெருஞ்செய்தியாக வலம் வருகிறது. ஊடகவிசாரணையால் நடிகை கிம் சே ரோன் தற்கொலைக்கு தள்ளப்பட்டது போல, நடிகர் கிம் சோ ஹூயுன் மீது சட்டரீதியான விசாரணையோ, நடவடிக்கையோ இல்லாத நிலையில் அவரை குற்றவாளியாக்கி கீழே தள்ளியிருக்கின்றன தென்கொரிய வலைதளங்கள்.. இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் .