சினிமா

மார்ச் 15 ஆம் தேதி "மாஸ்டர்" இசை வெளியீட்டு விழா

மார்ச் 15 ஆம் தேதி "மாஸ்டர்" இசை வெளியீட்டு விழா

jagadeesh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஆண்ட்ரியா, கைதி படத்தின் வில்லன் அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை மூன்று போஸ்டர்களை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14 ஆம் தேதி காதலர் தின பரிசாக ‘குட்டிக் கதை’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகவும், இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பிறகு போஸ்ட் புரோடக்ஷன் வேலைகளை இயக்குநர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து கடந்த சில நாள்களுக்கு முன்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வெளியிடப்படவுள்ளதாக படக் குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.