சினிமா

பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

sharpana

'கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடெக்ஷன் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.  

’விபத்துகள்... தற்கொலைகள்... என திடீர் திடீரென்று நடக்கும் சம்பவங்களை வழக்கமான ஊடகச் செய்திகளாக கடந்து விடக்கூடாது. விசாரணை செய்துபார்த்தால் கொலைகளாக இருக்கலாம். அதுவும், மரணித்தது இளம் பருவத்தினராக இருந்தால் அவை, திட்டமிடப்பட்ட ஆணவப்படுகொலைகளாக இருக்கலாம்’ என்ற  உண்மையை  ’பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் சமூகத்திற்கு அழுத்தமாகச் சொல்லி கவனம் ஈர்த்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இப்படத்தை தயாரித்து பாராட்டுகளைக் குவித்தார் இயக்குநர் பா.ரஞ்சித்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. அதனைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் 'கர்ணன்' படத்தின் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு கொடுத்தார். இப்படத்தின், படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பதை கடந்த புத்தாண்டு அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் துருவ் விக்ரம்.

இப்படத்தின், தயாரிப்பாளர் யார் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் பா.ரஞ்சித். கடந்த 2019 ஆம் ஆண்டு தனது நீலம் புரோடெக்ஷன் சார்பாக 5 திரைப்படங்களை தயாரிக்கவிருப்பதாக அறிவித்தார் பா.ரஞ்சித். அதில், மாரி செல்வராஜ் இயக்கும் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.