நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக மலையாள திரை உலகம் நிலைப்பாடு எடுத்திருப்பது கேரள மக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது நடிகை பாவனா கடத்தப்பட்டார். இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக காரில் துன்புறுத்தலுக்கு ஆளான பாவனா, கொச்சி அருகே வரும்போது தப்பிவந்து தனது நண்பர் வீட்டில் தஞ்சமடைந்தார். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பாவனா துணிச்சலாக காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்ததையடுத்து இந்த வழக்கு சூடுபிடிக்கத்தொடங்கியது. பல்சர் சுனி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலின் பின்னணியில் நடிகர் திலீப் இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் இன்று வரை அதனை திலீப் மறுத்துவருகிறார்.
இந்தச்சூழலில் சிறையில் இருக்கும் பல்சல் சுனியின் நண்பர் விஷ்ணு என்பவர் நடிகர் திலீப் ஒரு பெரும் தொகை தந்தால், அவரது பெயர் வழக்கில் சேர்க்கப்படாது என்று திலீப்பின் நண்பர் நாதிர்ஷாவுக்கு தொலைபேசி வழியில் மிரட்டல் விடுத்ததாக சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.
இந்த நிலையில்தான் ஏடிஜிபி சந்தியா தலைமையிலான குழு அலுவா போலீஸ் கிளப்பில் வைத்து திலீப்பிடம் நேற்று பகல் பனிரெண்டரை மணிக்கு விசாரணையை தொடங்கியது. நள்ளிரவுக்கு மேல் ஒருமணி அளவில் விசாரணை முடிந்தது. வழக்கு தொடர்பாக அனைத்தும் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் மீண்டும் திலீப் விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். திலீப்பின் நண்பரும் இயக்குருமான நாதிர்ஷா மற்றும் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கொச்சியில் இன்று நடந்த மலையாள திரைத்துறை அமைப்பான அம்மாவின் கூட்டத்தில், நடிகர் திலிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. நடிகர் திலீபை யாரும் வேட்டையாட அனுமதிக்க மாட்டோம் என்று மலையாள திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பாவனாவிற்கு ஆதரவாக எந்த கருத்தும் சொல்லப்படவில்லை. இதனால் கேரள திரைத்துறையினரின் நிலைப்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.