பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலுள்ள பயங்கவரவாதிகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. மேலும், 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவில் பல பகுதிகளில் ட்ரோன் தாக்குதலை மேற்கொள்ள முயன்றது. அதாவது, வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் குஜராத் வரையில் 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. ஆனாலும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயருக்கு இந்தித் திரைத்துறையில் டிமாண்ட் அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டு இந்தியா தாக்குதல் நடத்திய இரு தினங்களுக்குள், இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஆபரேஷன் சிந்தூர் எனும் தலைப்பைப் பதிவு செய்ய போட்டி போட்டு வருகின்றனர். இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் மற்றும் மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகளில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான தலைப்பிற்கு பதிவு செய்வதில் போட்டிகள் அதிகரித்து வருகின்றன.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 30 பேர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயருக்காக இந்த மூன்று அமைப்புகளுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இதில் மஹாவீர் ஜெயின் எனும் தயாரிப்பாளர் முதலில் பதிவு செய்து முன்னணியில் உள்ளார். இவர் Ram Setu, Good Luck Jerry, Uunchai போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர். T series மற்றும் Zee Studios போன்ற நிறுவனங்களும் ஆபரேஷன் சிந்தூர் எனும் தலைப்பிற்காகப் பதிவு செய்ததில் மூன்று மற்றும் நான்காம் இடங்களிலுள்ளன. உரி தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தார், இயக்குநரும் தயாரிப்பாளருமான மதுர் பண்டார்கர், இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி போன்றவர்களும் தலைப்பிற்காக விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் அனில் நாக்ரத் கூறுகையில், பெயருக்காக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கைன் 50 முதல் 60 வரை உயரலாம் எனத் தெரிவித்துள்ளார். இது ஒன்றும் புதியது அல்ல. முன்னதாக கார்கில் போர், உரி தாக்குதல் போன்றவை நடந்தபோதும் கார்கில், உரி போன்ற தலைப்புகளைப் பதிவு செய்ய இதேபோன்ற போட்டியும் நிகழ்ந்தது.
பெரும்பான்மையான மக்கள் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் மிஷன் சிந்தூர் எனும் பெயருக்காக விண்ணப்பித்துள்ளதாக அனில் நாக்ரத் தெரிவிக்கிறார். மேலும்., ஹிந்துஸ்தான் கா சிந்தூர், மிஷன் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சிந்தூர் கா பத்காலா போன்ற பெயர்களும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. எப்படியாகினும் முதலில் விண்ணப்பித்த நபருக்கே தலைப்பு ஒதுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், பதிவு செய்யப்பட்ட ஒரு தலைப்பினைப் பயன்படுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமே அவகாசம். அதற்குள் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படாவிட்டால் தலைப்பு திரும்பப் பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைப்பைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.300 + ஜிஎஸ்டி.. அவசரமாகத் தேவையெனில் ரூ.3000 + ஜிஎஸ்டி என்பது குறிப்பிடத்தக்கது.