சினிமா

திரைப்படமாகிறது மீராபாய் சானுவின் வாழ்க்கை பயணம்... ஒப்பந்தம் கையெழுத்தானது!

webteam

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கனவை முதலில் நிறைவேற்றிய மீராபாய் சானுவின் வாழ்க்கை பயோபிக் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தவர் மீராபாய் சானு. ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய். 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார் சீன வீரர் ஹோ சி ஹூய். இதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தை பிடித்தார் மீராபாய்.

2000-ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார் கர்ணம் மல்லேஸ்வரி. ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை 2 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மீராபாய் சானுவின் வாழ்க்கை பயணம் படமாகிறது. மீராபாய் சானுவின் மொழியான மணிப்பூரி மொழியிலேயே அவரின் பயோபிக் திரைப்படம் தயாராக உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று மீராபாய் தரப்புக்கும், இம்பால் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சியூட்டி பிலிம்ஸ் இடையே கையெழுத்து ஆகிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரிலிருந்து அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நோங்பாக் காக்சிங் என்ற மீராபாய் சானுவின் சொந்த ஊரில் வைத்து கையெழுத்து நிகழ்வு நடந்துள்ளது. சியூட்டி பிலிம்ஸ் நிறுவன அதிபர், மனோபி இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

படம், மணிப்பூரி மொழியில் எடுக்கப்பட்டாலும், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக PTI- க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், '' இப்போது படப்பிடிப்பு உடனடியாக துவங்கவில்லை. ஏனென்றால், மீராபாய் சானுவின் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தக் கூடிய, அவரின் தோற்றத்தை ஒத்த ஒரு பெண்ணை தேடி வருகிறோம். அப்படிப்பட்ட பெண் கிடைத்தவுடன் அவருக்கு மீராபாயின் வாழ்க்கை முறை, விளையாட்டு உள்ளிட்டவற்றை பயிற்சி அளிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகலாம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகும்.

இந்தப் படம் மீராபாயின் குழந்தை பருவ நிகழ்வுகள் முதல் டோக்கியோ ஒலிம்பிக் வரையிலான அவரின் பயணத்தை எடுத்துச் சொல்லும். நானே இதற்கு கதை எழுதி வருகிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.