மணிரத்னம் இயக்க இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் வரலாற்று நாவல்களில் மிகச் சிறப்பானது என இன்றும் கொண்டாப்படும் நாவல் ‘பொன்னியின் செல்வன்’. இதனை எழுத்தாளர் கல்கி கிருஷ்ண மூர்த்தி எழுதினார். ஒவ்வொரு புத்தக சந்தையிலும் அதிகம் விற்பனையாகும் இந்த நாவலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இந்த நாவலை திரைப்படமாக மணிரத்னம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க முடிவாகி இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த மூன்று நடிகர்களையும் வீர கலை வடிவங்களான குதிரை சவாரி, வாள் வீசுவது, களரி எனப் பல பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு இயக்குநர் அறிவுரை வழங்கி இருப்பதாக சினிமா வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பெண் கதாபாத்திரங்களில் நடிக்க ஐஸ்வர்யா ராயும், கீர்த்தி சுரேஷும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என இயக்குநரின் நெருங்கிய வட்டாரம் கூறி வருகிறது.
இந்நிலையில் நடிகை அமலா பால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இப்படத்திற்கான வரலாற்று இடங்களை தேர்வு செய்வதில் மணிரத்னம் மும்முரமாக இருப்பதாக தெரிகிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முடிந்த பிறகு முறையான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஆனால் இப்படம் குறித்து இதுவரை ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.