சினிமா

'கொரோனா சேலஞ்ச்' நிறைவு... 275 நாட்களுக்குப் பின் வெளியே வந்த மம்முட்டி!

sharpana

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கின்போது வீட்டிலேயே இருக்கத் துவங்கிய மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி 275 நாட்கள் கழித்து வீட்டைவிட்டு வெளியில் வந்துள்ள வீடியோக்களும் புகைப்படங்களும் வைரல் ஆகியுள்ளன.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கி ஊரடங்குப் அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலம் கேரளாதான். ஆரம்பத்தில் கேரளாவில்தான் அதிக கொரோனா எண்ணிக்கையும் அதிகரித்தது.

இதனால், மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி 'நான் வீட்டிலேயே இருக்கிறேன். முடிந்தவரை நீங்களும் வீட்டிலேயே இருங்கள்' என்று சவால் கடைப்பிடிக்கத் துவங்கினார்.

நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் என வயதானவர்களையே இதுவரை கொரோனா அதிகம் பாதித்துள்ளது. உலகளவில் இந்நோய்க்கு அதிகம் இறந்தவர்களும் முதியவர்கள்தான். வயதாகிவிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதோடு ஏற்கெனவே, பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் முதியவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் கொரோனா உள்ளது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் தாக்கும் கொரோனாவுக்கு அரசியல்வாதிகளே உயிரிழந்துள்ளனர். இதனால், பிரபலங்கள் பலர் கொரோனா அச்சத்தால் வெளியே வராமல் வீடுகளியே இருந்து வருகின்றனர்.

அப்படித்தான் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்று நடிகர் மம்முட்டியும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வீட்டிலேயே எங்கும் செல்லாமல் பழங்கள் பறிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, வீட்டிலேயே புகைப்படங்கள் எடுப்பது என்று தனது நடவடிக்கைகளை அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். 175 நாட்கள் கடந்த நிலையில் 'எனது அப்பா வீட்டிலேயே சவாலாக இருந்து வருகிறார்' என்று பெருமையுடன் பதிவிட்டிருந்தார் அவரது மகன் துல்கர் சல்மான்.

இந்நிலையில், நடிகர் மம்முட்டி 275 நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியில் நண்பர்களுடன் வந்து ரிலாக்ஸாக டீ குடித்திருக்கிறார். இந்த வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.