சினிமா

இயக்குநரை உருவக்கேலி செய்த விவகாரம்: சர்ச்சைகளையடுத்து நடிகர் மம்மூட்டி வருத்தம்

சங்கீதா

டொவினோ தாமஸின் ‘2018’ பட டீசர் விழாவில் கலந்துகொண்ட பேசிய மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இயக்குநரை உருவக் கேலி செய்ததற்காக கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தனது செயலுக்கு சமூகவலைத்தள பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இயக்குநரும், நடிகருமான ஜூட் ஆண்டனி ஜோசப், எழுதி இயக்கியுள்ள படம் ‘2018’. கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 483 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காணாமல் போயினர். ஏராளமான கோடி ரூபாய் பொருட்சேதமும் ஏற்பட்டது. இதை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சகோ போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், லால், இந்திரன்ஸ், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அடுத்தாண்டு (2023) வெளியாக உள்ளதை முன்னிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் டீசர் வெளியிடும் விழா கேரளாவில் நடைபெற்றது. இந்த டீசர் விழாவில் கலந்துகொண்டு பேசிய மம்மூட்டி, “தலையில் குறைவான முடிகளே இருந்தாலும், ஜூட் ஆண்டனி தற்போதும் புத்திசாலியாகவே இருக்கிறார்” என்று கூறியிருந்தார். இதையடுத்து பலரும் அவருக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். உருவக் கேலி செய்ததாக மம்மூட்டியை நெட்டிசன்கள் சாடியிருந்தநிலையில், இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் மம்மூட்டி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். அதில், “அன்பானவர்களே! ‘2018’ டீசர் விழாவில் இயக்குநர் ஜூட் ஆண்டனியை பாராட்டுவதற்காக உற்சாகத்துடன் நான் பயன்படுத்திய வார்த்தைகள், சிலரின் மனதை காயப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு கவனமுடன் பார்த்துக்கொள்கிறேன். நினைவுப்படுத்திய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.