சினிமா

மம்மூட்டி நடிப்பில் ஐந்தாம் பாகமாக தயாராகும் 'சிபிஐ டைரிக்குறிப்பு'

மம்மூட்டி நடிப்பில் ஐந்தாம் பாகமாக தயாராகும் 'சிபிஐ டைரிக்குறிப்பு'

நிவேதா ஜெகராஜா

மம்மூட்டி நடிப்பில் ஐந்தாம் பாகமாக தயாராக இருக்கிறது 'சிபிஐ டைரிக்குறிப்பு'. இது தொடர்பான தகவல்கள் வெளியாகி இருப்பதை அடுத்து மம்மூட்டி ரசிகர்கள் அதுதொடர்பாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நவீன சினிமாவில் தற்போது ஒரு படம் வெற்றியடைந்தால், அதன் அடுத்த பாகங்கள் வெளிவருவது வாடிக்கையாகிவிட்டது. சிங்கம், பில்லா, திரிஷ்யம், கேஜிஎப் போன்ற பல படங்கள் இதற்கு உதாரணம். எனினும் இதுபோன்ற படங்கள் பெரும்பாலும் இரண்டு பாகங்களை தாண்டுவது கடினம்.

ஆனால் மலையாளத்தில் ஒரு படம் ஐந்தாவது பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. அது மம்மூட்டி நடிப்பில் வெளியான 'சிபிஐ டைரிகுறிப்பு' படம். 1988ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் ஹிட் அடித்ததுடன், மம்மூட்டி மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவருக்கு பெரிய அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அது அமைந்தது.

இந்தப் படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜாக்ரதா (1989), சேதுராம ஐயர் சிபிஐ (2004), நேரறியான் சிபிஐ (2005) என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 32 வருடங்களில் வெளியாகி ஹிட் அடித்தன. இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற கதாபாத்திரத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார் மம்மூட்டி. இந்தப் படங்களை இயக்கியவர் தமிழில் 'மௌனம் சம்மதம்' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் மது. கதை எழுதியவர் மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான எஸ்.என்.சுவாமி.

கடந்த 2005ம் ஆண்டு படத்தின் நான்காம் பாகம் வெளியானபோதே ஐந்தாம் பாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தன. எனினும் அதன்பிறகு அந்த திட்டம் கைகூடவில்லை. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. இப்போது 15 வருட காத்திருப்புக்கு முடிவு கிடைத்துள்ளது. ஆம், ஐந்தாம் பாகம் தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஆக.17-ஆம் தேதி கேரளாவின் சிறப்பு வாய்ந்த சிங்கம் மாதத்தின் முதல் நாளன்று வெளியாக இருப்பதாக முன்னணி மலையாள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சில மாதங்கள் முன், இந்தப்படத்தின் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி மம்மூட்டியை நேரில் சந்தித்து இந்த படத்தை துவங்குவது பற்றி பேசிவிட்டு வந்த பிறகு இந்த செய்திகள் வெளிவந்துள்ளன. ஐந்தாம் பாகத்தில், மம்மூட்டியுடன் பிரபல மலையாள நடிகர்களான ரஞ்சி பணிக்கர், சௌபின் சாகிர், 'பாபநாசம்' புகழ் நடிகை ஆஷா சரத், சாய்குமார் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும், படத்தின் கதைக்களம் இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் மதுவே மீண்டும் இந்தப் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.