இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. கடந்த மார்ச் மாதம் முதல் அவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார் எனவும் தகவல்கள் பரவின. அவரின் நண்பர்களும் சினிமா பிரபலங்கள் பலரும், அவருக்கு சாதாரண உடல்நல பிரச்சனைதான் விரைவில் குணமாகிவிடுவார் எனவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால், சபரிமலை சென்று மோகன்லாலுக்காக பிரார்த்தனை செய்த செய்திகளையும் நாம் பார்த்திருப்போம். சென்ற மாதம் மம்மூட்டி உடல்நலம் சீராகிவிட்டது எனவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் `பேட்ரியாட்'. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து மோகன்லால் - மம்மூட்டி இணைந்து நடிக்கும் படம் இது. இப்படம் 60% நிறைவடைந்த நிலையில் மம்மூட்டியின் உடல்நலக் குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சென்னையில் தங்கி இருந்து கடந்த 8 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த மம்மூட்டி இப்போது மீண்டும் படப்பிடிப்புகளுக்கு திரும்ப உள்ளார்.
அக்டோபர் முதல் வாரத்தில் `பேட்ரியாட்' படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. ஹைதராபாத் ராமோஜி ராவில் துவங்கவுள்ள இப்படப்பிடிப்பில் மம்மூட்டி இணையவுள்ளார். முதலில் அடுத்த மாதம் திரைக்கு வருவதாக இருந்த இப்படம், இப்போது ஏற்பட்டுள்ள தாமதங்களால் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. விரைவி புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ மம்மூட்டி உடல்நலம் பெற்று படப்பிடிப்பு திரும்புகிறார் என்ற செய்தி ரசிகர்களிடம் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.