சினிமா

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய மம்மூட்டி!

PT WEB

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடுக்கி மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் நிவாரண முகாம்களை ஏற்படுத்தி உதவிக்கரம் நீட்டி வருகிறார் மலையாள நடிகர் மம்மூட்டி.

கேரளாவில் சில நாட்களாக அதீத மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்கள் முன்பு கனமழையால் இடுக்கி மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மொத்தம் 24 பேர் வரை மரணமடைந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட அன்று ஒரேநாளில் மட்டும் 21 பேர் வரை இறந்த சோகம் நிகழ்ந்தது. பலரது குடும்பமும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு மீட்புப்பணிகள் மெதுவாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. இதற்கு முன்பு பலமுறை கேரளம் இயற்கை இடர்பாடுகளை சந்தித்த முதல் ஆளாக உதவிய மம்மூட்டி, இப்போதும் உதவி வருகிறார். கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும் மம்மூட்டி, கூட்டிக்கல் மக்களுக்கும் இதன்மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

முதல்கட்டமாக ஆலுவா பகுதியின் தனியார் மருத்துவமனை மருத்துவக் குழுவை ஏற்பாடு செய்து கூட்டிக்கல் பகுதிக்கு அனுப்பியுள்ளளார் மம்மூட்டி. பல நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் கூட்டிக்கல் வந்துள்ள அந்த மருத்துவக்குழு புகழ்பெற்ற நுரையீரல் நிபுணர் ஒருவர் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. மருத்துவ உதவிகளை மட்டும் மம்மூட்டி செய்யவில்லை.

நிலச்சரிவால் குடும்பங்களை, இருப்பிடங்களை இழந்த மக்களுக்கு புதிய ஆடைகள், புதிய பாத்திரங்கள், படுக்கைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் அடங்கிய நிவாரண பைகள் மம்மூட்டி சார்பில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 2000-க்கும் மேற்பட்ட நிவாரண பைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உதவி தொடர்பாக பேசியுள்ள கேர் அண்ட் ஷேர் நிர்வாக இயக்குனர் தாமஸ் குரியன், " பேரழிவு ஏற்பட்ட மறுநாளே மருத்துவக்குழு நிவாரண முகாம்களுக்குச் சென்றுவிட்டது. மம்மூட்டி அளித்த அறிவுரையின்படி அங்கு எங்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மம்மூட்டி நேரடியாக உதவுவதுடன், கனடா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மம்முட்டி ரசிகர்களும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிதியுதவி செய்து வருகின்றனர்" என்றுள்ளார்.