Mammootty Adoor Gopalakrishnan
சினிமா

மீண்டும் அடூர் இயக்கத்தில் மம்மூட்டி! | Mammootty | Adoor Gopalakrishnan

மம்மூட்டி எப்போதும் புது புது சவால்களை தேடி செல்லும் நடிகர், ஒரு நல்ல நடிகனுக்கான குணம் அதுதான். ஏற்கெனவே செய்த ரீதியில் நடிப்பதை அவர் விரும்பவில்லை. புதுப்புது பாத்திரங்களை அவர் தேடுகிறார். அது பெரிய விஷயம்

Johnson

மலையாள சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். `Swayamvaram', `Kodiyettam', `Mukhamukham', `Vidheyan', `Naalu Pennungal' என மலையாளத்தில் பல உன்னதமான சினிமாக்களை இயக்கியவர், 2016ல் இவர் இயக்கத்தில் வெளியான `பின்னேயும்' (Pinneyum) படத்திற்கு பிறகு திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார். தற்போது இவர் மீண்டும் படம் இயக்க உள்ளதை அறிவித்துள்ளார்.

Vidheyan

மம்மூட்டி - அடூர் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது என கடந்த பல நாட்களாக ஒரு தகவல் உலவி வந்தது. அனந்தரம் (Anantaram), மதிலுகள் (Mathilukal) மற்றும் விதேயன் (Vidheyan) என மம்மூட்டி நடிப்பில் தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார் அடூர். மூன்று படங்களுமே சினிமா உலகில் பெரிதும் கொண்டாடப்படுபவை. குறிப்பாக `விதேயன்' படம் இன்றளவும் சினிமா ரசிகர்கள் மத்தியில் வியந்து பேசப்படும் படம். 93ல் வெளியான `விதேயன்' படத்திற்கு பிறகு மம்மூட்டி - அடூர் கூட்டணி இணையாமலேயே இருந்தது. இப்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு இக்கூட்டணி நான்காவது முறையாக இணைகிறது. இப்படத்தில் நடிப்பதோடு அல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பனி மூலம் படத்தை தயாரிக்கிறார் மம்மூட்டி.

இப்படம் பற்றி செய்தி நிறுவனம் ஒன்றில் பேசிய அடூர், "மம்முட்டியே கதாநாயகனாக நடிக்கிறார். மீதமுள்ள கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. திரைக்கதை எழுதும் பணி நடந்து கொண்டிருந்தபோது, மையக் கதாபாத்திரத்திற்கு மம்முட்டியின் முகம் மட்டுமே என் நினைவுக்கு வந்தது. அவர்தான் அந்த கதாபாத்திரத்திற்கு சரியான நபராக இருப்பார் என்று உணர்ந்தேன். எனது படங்களில் அவர் கதாநாயகனாக நடிப்பது இது நான்காவது முறையாகும். நான் வேறு எந்த முன்னணி நடிகருடனும் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை. இதை பற்றி மம்மூட்டியிடம் நான் கூறிய போது, அவரே இப்படத்தை தயாரிக்கிறேன் என சொன்னார். மம்மூட்டி எப்போதும் புது புது சவால்களை தேடி செல்லும் நடிகர், ஒரு நல்ல நடிகனுக்கான குணம் அதுதான். ஏற்கெனவே செய்த ரீதியில் நடிப்பதை அவர் விரும்பவில்லை. புதுப்புது பாத்திரங்களை அவர் தேடுகிறார். அது பெரிய விஷயம் " என்றார். 

தற்போது மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள `களம்காவல்' படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.