55வது கேரள மாநில திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 2024ல் வெளியான மலையாளப்படங்களில் பல முக்கியமான படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை, சிறந்த கலை இயக்கம், இதில் சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 9 விருதுகளை வென்றிருக்கிறது சிதம்பரம் இயக்கிய `மஞ்ஞுமல் பாய்ஸ்'. இதில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, 2025ம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளில் 'பிரம்மயுகம்' படத்திற்காக 'சிறந்த நடிகர்' விருதைப் பெற்றுள்ளார்.
விருது பெற்றது பற்றி செய்தியாளர்களை சந்தித்து மம்மூட்டி கூறிய போது "என்னுடன் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். என் உடன் நடித்தவர்களுக்கும் நன்றி. ஆசிஃப், டொவினோ, ஷ்யாம்ளா ஹம்ஸா, சித்தார்த் பரதன், சௌபின் சாஹிர், அமல் நீரத் குழு, மஞ்ஞுமல் பாய்ஸ் குழு உள்பட விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், கிடைக்காதவர்களுக்கு அடுத்த முறை கிடைக்கும். விருது கிடைக்கும் என எதிர்பார்த்து நடிக்கவில்லை. அது தானாக நடக்கிறது.
இது ஒரு பயணம், உடன் வருபவர்களும் இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும், அப்படி எடுத்துக் கொள்வதே போதுமானது. இதனை ஒரு பந்தயமாகவோ, போட்டியாகவோ எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இது ஓட்டப்பந்தயம் இல்லையே?" புதிய தலைமுறை நடிகர்கள் பல விருதுகளை வென்றிருக்கிறார்களே எனக் கேட்டதும் "நான் யாரு பழைய தலைமுறையா? நானும் இந்த தலைமுறை தானே" என்றார்.