மாமன்னன்
மாமன்னன் ட்விட்டர்
சினிமா

பெரும்வலியை தாலாட்டாக கடத்தும் “ராசா கண்ணு” பாடல்! இதயங்களை கட்டிப்போட்ட இசை - வைகை புயல்கள்!

Rishan Vengai

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபக்த் பாசில் போன்ற பல நடிகர்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள படம் “மாமனிதன்”.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ரிலீஸுக்கான கடைசிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், “ராசா கண்ணு” என்னும் மாமன்னன் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

“பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்”- மாரி செல்வராஜ்

“கண்டா வரச்சொல்லுங்க” என்ற கர்ணன் படப்பாடலை எடுத்துக்கொண்டால், இருட்டிலிருந்து ஒலிக்கும் ஒரு அழுகுரல் முதலில் “பஞ்சம் திண்ணு வளர்ந்த புள்ள” என்று வலியை கடத்திவிட்டு, மெல்ல மெல்ல தீயின் வெளிச்சத்திற்கு வரும் போது, அந்த வலியில் இருந்து எப்படியாவது கூட்டிவா என கர்ணனை அழைப்பது போல் நிறைவு பெற்றிருக்கும். அதில் தீ, பறை மேளம் என இரண்டும் அதிகமாக காட்சியில் நிறைந்திருக்கும்.

அதைப்போலவே “ராசா கண்ணு” பாடலிலும் “பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்” என்ற மாரிசெல்வராஜ் கவிதையுடன் தொடங்குகிறது பாடல். தொடக்கத்திலேயே ‘தந்தானா தானா’என்ற வடிவேலுவின் குரலும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையும் நம்மை ஒரு டோனுக்குள் இழுத்து செல்கின்றன.

“குச்சுக்குள்ள கிடந்த சனம், கோணி சாக்குல சுருண்ட சனம், பஞ்சம் பசி பார்த்த சனம், படையிருந்தும் பயந்த சனம்” என யுகபாரதியின் வரிகள் வலியை கூற, அதை இசையோடும், கரகர குரலோடும் உள்ளுக்குள் கடத்துகின்றனர் இரண்டு புயல்களும்.

‘காட்டுக்குள்ள கருவேலம் முள்ளு ராசா, நாம கால்நடக்க பாதையாச்சே ராசா’ என தொடங்கி ‘நடந்த பாதையில் அத்தனையிலும் ராசா, அதில் வேலிபோட்டு மரிச்சதாரு ராசா’ என்று நீண்ட காலமாக இருந்த ஒன்றை மாற்றிபோட்டது யாரு என்ற கேள்வியோடு முடியும் பாடலில், “பட்ட காயம் எத்தனையோ ராசா, அதை சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா” என்று ஒரு பெரும்வலியை தாலாட்டாகவே இறுதியில் கடத்துகிறது “ராசா கண்ணு” பாடல்.

மாமன்னன்

முடிவில் நெருப்பிற்கு பின்னால், உதயநிதி கையில் வாளுடன் நிற்பது போல் முடிகிறது பாடல். இந்த பாடலிலும் தீ மற்றும் பறை அதிக காட்சிகளில் இடம்பெற்றுள்ளன. முதல் சிங்கிள் வெளியானதிலிருந்தே ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது இந்த பாடல்.