தனது ஹாட் புகைப்படங்களால் மட்டும் சமூக வலைதளங்களை வைரலாக வைத்திருக்கவில்லை. மக்கள் பிரச்னைகளைப் அக்கறையோடு பேசுவதாலும்தான் வைரலாக வலம் வருகிறார், மாளவிகா மோகனன். தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இவரின் போட்டோக்களோடு சமூக பிரச்னைகளுக்கான எதிர்ப்புக்குரலும் ஓங்கி ஒலித்துக்கொண்டே வருகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் உயிரிழந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்காக நீதிகேட்டு “எனக்கு 14 வயதாக இருக்கும்போது நெருங்கிய நண்பன் என்னிடம், அவரது தாயார் எப்போதும் டீ குடிக்கமாட்டார் என்றான். நான் ஏன் என்று கேட்டதற்கு, டி குடித்தால் தோலின் நிறம் கருமை ஆகிவிடும் என்ற வித்தியாமான நம்பிக்கை இருப்பதாக சொன்னான். ஒருமுறை வீட்டிற்குச் சென்றபோது அவனது அம்மாவிடம் டீ கேட்டான். தரமறுத்த அவர், டீ குடித்தால் மாளவிகா போன்ற நிறத்துக்கு வந்துவிடுவாய் என்றார். இதனைக்கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் கலராக இருக்கும் மகாராஷ்டிர குடும்பம். நான் மாநிறமுள்ள மலையாளி பெண். இது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதற்குமுன் என்னை யாரும் அப்படி பேசி கேட்டதில்லை. நமது சமூகத்தில் இனவெறி; நிறபேதம் இருந்து வருகிறது. கருப்பாக இருப்பவர்களை காலா என்கிறார்கள்.
தென்னிந்தியர்கள் மற்றும் வடகிழக்கு இந்தியர்கள் மீதான பாகுபாடு அச்சமூட்டும் ஒன்றாக உள்ளது. கருப்பு நிறம் கொண்டவர்களை நகைச்சுவையாக மதராஸி என்று அழைக்கும் பழக்கமும் தொடர்கிறது. ஏனென்றால், தென்னிந்தியவர்கள் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். வட கிழக்கு மாநிலத்தவர்களை சிங்கி என்று அழைக்கிறார்கள். அனைத்து கருப்பின மக்களும் நீக்ரோக்கள் என்றும் வெள்ளை நிறத்தில் இருப்பவர்களை அழகானவர்கள் என்றும் சமன்படுத்தப்படுகிறார்கள். உலகளவிலான இனவெறி பற்றி பேசும்போது நம் வீடுகளிலும் நண்பர் வட்டங்களிலும் நம்மைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
இனவெறி மற்றும் நிற பேதத்தை ஒழிப்பதை அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் அன்பான நபராக இருப்பதுதான் உங்களை அழகான மனிதராக்கும். உடலின் நிறம் அல்ல” என்றிருக்கிறார். அதோடு தூத்துக்குடியில் தந்தை மகன் அடுத்தடுத்து காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்ட சம்பவத்தில் , ’இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு உணர்ச்சியற்று திகைத்துப்போய்விட்டேன். காவல்துறையின் இந்த மிருகத்தனம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானமற்றது’ என்று நீதிக்காக தனது குரலை மாளவிகா மோகனன் உயர்த்தியுள்ளார்.