படக்குழுவினர் கூகுள்
சினிமா

ஆட்டம் ஆரம்பம்... 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்முட்டி - மோகன்லால்!

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மளையாள சினிமாவில் இணையும் மம்முட்டி மோகன்லால்... மகிழ்ச்சி கடலில் கேரள ரசிகர்கள்.!

Jayashree A

தமிழ் சினாமாவில் ரஜினி கமல் காலத்தையொத்தவர்கள் கேரள சினிமாவில் மம்முட்டியும் மோகன்லாலும். இருவரும் தங்களது தனிப்பட்ட நடிப்புத் திறமையால் மளையாள சினிமாவில் கொடிகட்டி பறந்தவர்கள். இவர்கள் படம் ரிலீஸ் என்றால் கேரளாவில் மட்டுமல்ல, தென் இந்தியாவிலேயே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

கடந்த காலங்களில் சில படங்களில் இணைந்து நடித்த இவர்கள், மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று மளையாள ரசிகர்கள் விரும்பினர். அந்த ஆசையை பூர்த்திசெய்யும் வகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இருவரும் ஒரு மளையாளப் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முன்னதாக இருவரும் அதிராத்ரம், அனுபந்தம், வர்தா, கரியில காட்டு போல, அடிமகள் உடமகள், ஹரிகிருஷ்ணன்ஸ் டுவெண்டி டுவெண்டி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பெரிய பட்ஜெட் செலவில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆண்டன் ஜோசப் தயாரிப்பில், சி ஆர் சலீம் மற்றும் சுபாஷ்ஜார்ஜ் மானுவெல் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மம்முட்டி கதாநாயகனாகவும், மோகன்லால், ஃபஹத் ஃபாசில், குஞ்சகோபோபன், நயன்தாரா போன்ற பலர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக இலங்கையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஆரம்ப விழாவில் மம்முட்டி பங்கேற்ற நிலையில், மோகன்லால் விளக்கேற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இலங்கையைத் தவிர லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஹைதராபாத், டெல்லி, கொச்சி ஆகிய நகரங்களில் படம் 150 நாட்களில் முடிக்கப்படவுள்ளது.