தாதா சாகேப் பால்கே விருதை மலையாள திரைத்துறையின் பெருமை, மரபு, படைப்பாற்றலுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த மரியாதையாகப் பார்ப்பதாக நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டில் பல்வேறு மொழிகளில், பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேற்று விருது வழங்கினார். அந்த வகையில், திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன் லாலுக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதைப் பெற்றபின் பேசிய அவர், ’’தாதா சாகேப் பால்கே விருதை மலையாள திரைத்துறையின் பெருமை, மரபு, படைப்பாற்றலுக்குக் கிடைத்த ஒட்டுமொத்த மரியாதையாகப் பார்க்கிறேன். கலைத்திறன் மூலம் மலையாள திரைத்துறையை ஏற்றம்பெறச் செய்தவர்களின் சார்பாக விருதைப் பெற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெருமைமிகு தருணத்தை நான் கனவில்கூட நினைத்துக்கூட பார்க்கவில்லை” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார்.
மேலும், இந்த விருதைப் பெற்ற இளையவர் என்ற பெருமையையும், 2004 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்குப் பிறகு கேரளாவிலிருந்து இரண்டாவது நபராக இருப்பதிலும் தான் பெருமைப்படுவதாக அவர் கூறினார். புகழ்பெற்ற மலையாளக் கவிஞரும், சமூகச் சீர்திருத்தவாதியும், தத்துவஞானியுமான குமரன் ஆசானின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய அவர், "இந்த மலர் வெறுமனே மண்ணில் விழவில்லை. அஃது ஓர் அழகான வாழ்க்கையை விட்டுச் சென்றது. இந்த தருணம் பிரகாசத்துடன் மலர்ந்து, தொடர்ந்து ஊக்கமளிக்கும் நறுமணத்தைவிட்டுச் சென்ற அனைவருக்கும் அஞ்சலி செலுத்தட்டும்" என்று கூறினார்.