இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு வாய்ப்புகள் குறைந்ததற்கு மதரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம் எனவும், `சாவா' படம் பிரிவினைவாதம் பேசும் படம் எனவும் கூறி இருந்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்ளில் வைரலான நிலையில், ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பாஜகவினர் உட்பட பலரும் தங்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து, இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், 'நான் இந்தியனாக இருக்கவே விரும்புகிறேன் எனவும் யாரையும் புண்படுத்தும் நோக்கில் தான் பேசவில்லை' எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில்தான், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை விமர்சித்தும் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ’இந்தியா உங்கள் தாய் என்றும், பாஜகவினரின் கட்டாய சலாம் இந்தியாவுக்குத் தேவையில்லை’ என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், ’நீங்கள் மௌனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை, முகமது அலி போன்ற உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றே சாதித்தனர், நீங்களும் துணிச்சலாக இருங்கள்’ என்றும் அவர் ஊக்கப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து, நாட்டில் சிறுபான்மையினக் கலைஞர்கள் மீதான அரசியல் அழுத்தங்களைச் சுட்டிக்காட்டியுள்ள மஹுவா, தனது பதிவின் இறுதியில் ‘வந்தே மாதரம்’ எனக் குறிப்பிட்டு முடித்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.