மாதவனும், சூர்யாவும் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
‘விக்ரம் வேதா’ மூலம் ப்ளாக்பாஸ்டர் வெற்றியை கொடுத்தவர் மாதவன். பழைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த பிறகு சினிமா துறையே முடங்கியது. அந்த நேரத்தில் வெளியாகிய இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய சாதனையை அடைந்தது. அதன் பிறகு இவர் எந்தப் படத்தில் ஒப்பந்தமாக இருக்கிறார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் டீசரை இந்த மாதம் 31ம் தேதி காண தயாராக இருங்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “இந்த உலகத்தில் எவ்வளவோ கதைகள் இருக்கு. அதில் பல கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். பல கதைகள் உங்க காதுக்கே வராம போயிருக்கலாம். ஆனால் சில கதைகள் பத்தி நீங்க தெரிஞ்சுக்காம இருக்கிறது உங்களுக்கு இந்த நாட்டு மேல இருக்குற அக்கறை இல்லாம இருக்குறதுக்கு சமம். நம்பி நாராயணன். இவருடைய கதையை நீங்க கேட்டீங்கன்னா, இவருடைய சாதனையை நீங்க பார்த்தீங்கன்னா, உங்களால பேசாம இருக்க முடியாது. ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ’ பத்தி தெரிஞ்சுக்காம இருக்குறவங்க தெரிஞ்சுக்குவாங்க. தெரியும்னு நினைக்குறவங்க கேட்டு மிரண்டு விடுவாங்க.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்திற்கு ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என தலைப்பிட்டுள்ளனர். இதனை அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பற்றிய வேறு தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் பத்திரிகை செய்திகளில் சூடான செய்தியாக வலம் வந்த இஸ்ரோ விஞ்ஞானியின் கதை என்பதை மட்டும் தெரிவித்துள்ளதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா பகிர்ந்து கொண்டுவிட்டு, “மாதவன் பிரதர் மிக அற்புதமாக உள்ளது. நானும் இந்தக் கனவின் ஒரு பகுதியாக இருப்பதை விரும்புகிறேன். நம் இதயம் என்ன சொல்கிறதோ அதை செய்வோம்” என்று கூறியுள்ளார்.
இவரது ட்விட்டை வைத்து சூர்யாவும் இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து நடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது சம்பந்தமாக படக்குழு எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.