இயக்குநர் ராம் - நிவின் பாலி இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பேரன்பு’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்துக்குப் பின் நடிப்பில் கவனம் செலுத்திய ராம், மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், ராம் - நிவின் பாலி இணையும் புதிய படம் குறித்து சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், கொரோனா ஊரடங்கால் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இன்று ’மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிக்கும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ படங்களைத் தொடந்து ஐந்தாவது முறையாக இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பை ஒரு டிராயிங் போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் புலி, மீன் போன்ற உருவங்களும், கீழே வேட்டையாடுதல் போன்ற சித்திரமும் இடம்பெற்றுள்ளது. இது என்ன மாதிரியான கதையாக இருக்கும் என போஸ்டர் யோசிக்க வைத்துள்ளது.