சினிமா

மீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்

மீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்

webteam

நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

சில வருடங்களாக சிம்பு நடிப்பதில் மெத்தனம் காட்டி வந்தார். அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் முளைக்க ஆரம்பித்தன. அவரும் ‘தான் சின்ன வயதில் இருந்தே நடித்து வருவதால் ஒரு அசதி ஏற்பட்டுள்ளது’ என வெளிப்படையாக அறிவித்தார். பின் காசிக்கு பயணம் மேற்கொண்டார். ஆகவே அவர் இனி நடிப்பது சிரமம் எனப் பேசி வந்தனர். 

இந்நிலையில்தான் யாரும் எதிர்பாராதவிதமாக மணிரத்னம் படத்தில் கமீட் ஆனார் சிம்பு. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்றும் பலர் வதந்தி பரப்பினர். அப்போதும் அவர் சோர்ந்து போகவில்லை. பழைய நிலைக்கு திரும்பி தனது உடல் எடையை குறைத்தார். ‘மணிரத்னம் படத்தில் நடித்தது என் கனவு’ என்றார். அதற்காக முறைப்படி ஷூட்டிங் தளத்திற்கு சென்றார். நேரம் தவறாமையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார். ஆக, பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் தன் நடவடிக்கையால் உடைத்தெறிய ஆரம்பித்திருக்கிறார் சிம்பு.

இந்த வருடம் அவர் ‘செக்கச் சிவந்த வானம்’அடுத்து வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படங்களில் ஒப்பந்தமானார். அந்தப் படங்களின் பேச்சு அடிப்பட்டுக் கொண்டுள்ளபோதே இப்போது அடுத்த படத்தையும் உறுதி செய்திருகிறார் சிம்பு. அதன்படி அவரது அடுத்த படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க இருக்கிறார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதனை அதிகாரபூர்வமாக அந்நிறுவனமே உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்தப் படம் 2019 ஜனவரி மாதம் திரைக்கு வரும் என கூறியுள்ளது.