இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலித்து வெற்றியடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து அவரை பாராட்டியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இந்தப் படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் கதாநாயாகனாகவும் அறிமுகமாகியுள்ள நிலையில், திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக 2கே கிட்ஸ் ரசிகர்களிடையே ‘லவ் டுடே’ படம் பாசிட்டிவ் கருத்துக்களை பெற்றுவருகிறது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக முதல் நாளில் மட்டும் 6 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டியது. இந்நிலையில், இந்தப் படம் 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.
மேலும், இந்தப் படத்தை பார்த்த தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது, “இதற்கு மேல் நான் என்ன கேட்கப்போகிறேன்? சூரியனுக்கு அருகில் நிற்பது போல அவ்வளவு இதமாக இருந்தது. அந்த இறுக்கமான அணைப்பு, அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல் மற்றும் அன்பு. என்ன ஒரு ஆச்சர்யமான மனிதர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் என்னுடைய படத்தை பார்த்துத் பாராட்டினார். நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.