சினிமா

சென்னை வெள்ளத்தில் ஆதவ்-க்கு கிடைத்த காதல்!

சென்னை வெள்ளத்தில் ஆதவ்-க்கு கிடைத்த காதல்!

webteam

கவியரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன். இவர் ’பொன்மாலை பொழுது’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் ’யாமிருக்க பயமே’ படத்தில் நடித்தார். இவருக்கும் சென்னையை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் டிசம்பர் 6-ம் தேதி திருமணம் நடக்கிறது. 

இதுபற்றி ஆதவ் கண்ணதாசன் கூறும்போது ’இது காதல் திருமணம்தான். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் அறிமுகமானார் வினோதினி. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்த வெள்ளத்தின் போது இருவருமே பல உதவிகளை செய்துவந்தோம். அப்போதிருந்து எங்கள் நட்பை வளர்த்தோம். சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் காதல் வயப்பட்டிருப்பதை உணர்ந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். முதலில் வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் ஏற்றுக்கொண்டனர். இது டிசம்பர் காதல் கதை’ என்ற ஆதவ், புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்கிறார். 

‘இந்தப் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். திருமணத்துக்குப் பிறகு அதிக படங்களில் நடிக்க இருக்கிறேன்’ என்றார் ஆதவ் கண்ணதாசன்.