சினிமா

’விக்ரம்’-ல் இணைந்த தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்

sharpana

லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ படத்தில்  தேசிய விருதுபெற்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்திருக்கிறார்.

 ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். ஃபகத் ஃபாசில், நரேன் உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் இப்படத்தில், தேசிய விருதுபெற்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் இணைந்திருக்கிறார். இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில்  வெற்றி பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.  குறிப்பாக, ஒளிப்பதிவிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு சிறந்த ஒளிப்பதிவுக்காக ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

மேலும், சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படத்திற்கு கேரள அரசின் விருதும் கிடைத்தது. மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ‘அங்கமாலி டைரீஸ்’, விஜய் நடிப்பில் வெளியான ஏ.ஆர் முருகதாஸின்  ’சர்கார்’ படங்களுக்கு கிரிஷ் கங்காதரன்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரித்விராஜ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘கோல்ட் கேஸ்’ படத்திற்கும் ஒளிப்பதிவாளர் இவரே. இந்த நிலையில், லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பதிவு: https://twitter.com/Dir_Lokesh/status/1410946073200189443?s=20