சினிமா

முத்தக்காட்சியா? நோ என்கிறார் மலர் டீச்சர்

முத்தக்காட்சியா? நோ என்கிறார் மலர் டீச்சர்

webteam

’பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ்பெற்றவர் சாய் பல்லவி. இப்போது இவர் தெலுங்கில் நடித்துள்ள ’ஃபிடா’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து தமிழில் விஜய் இயக்கும் ’கரு’, தெலுங்கில் ’மிடில் கிளாஸ் அப்பாயி’ படங்களில் நடித்து வருகிறார். 

இதுபற்றி சாய் பல்லவி கூறும்போது, ‘சினிமாவில் நடிக்கும்போதுதான் சில விஷயங்களை கற்க முடிகிறது. பிரேமம் படத்தில் நடிக்கும்போதுதான் முதன் முதலாக டீ குடித்தேன். ஃபிடா படத்தில் நடித்தபோது டிராக்டர் ஓட்டினேன். இதெல்லாம் நடக்கும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. ’ஃபிடா’வில் தெலங்கானா வழக்கில் பேசி நடித்தேன். எனக்கு தெலுங்கு தெரியாது. இருந்தாலும் கற்றுக்கொண்டு பேசினேன். சரியாக வரவில்லை என்றால் டப்பிங் ஆர்டிஸ்ட் கொண்டு பேச வைப்பேன் என்றார் இயக்குனர். ஆனால், நானே பேசினேன். எனக்கு கிளாமராக நடிக்க விருப்பமில்லை. அதில் உறுதியாக இருக்கிறேன்.

அதோடு முத்தக்காட்சியில் நிச்சயமாக நடிக்க மாட்டேன். என் ஆசைக்காகத்தான் சினிமாவில் நடிக்க பெற்றோர் சம்மதித்துள்ளனர். கிளாமர் மற்றும் முத்தக்காட்சியில் நடித்து அவர்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க விரும்பவில்லை’ என்ற சாய் பல்லவியிடம், ‘டாக்டருக்கு படிச்சீங்களே?’ என்று கேட்டால், ‘ஜார்ஜியாவில் படித்தேன். கண்டிப்பாக ஒரு நாள் கார்டியாலஜிஸ்டாக ஆவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்கிறார் இந்த நடனப் புயல்.