சினிமா

விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தின் புதிய போஸ்டர் - ரசிகர்கள் எதிர்பார்க்காத புகைப்படம்

சங்கீதா

விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் உருவாகி வரும் ‘லைகர்’ படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல குத்துத் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார்.

மணி சர்மா இசையில், விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். கரண் ஜோகர், பூரி ஜெகந்நாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நிர்வாணமாக பூங்கொத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா, ‘என்னிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டது இந்தப் படம். நடிப்பிலும், மனதளவிலும், உடல் அளவிலும் எனக்கு மிகவும் சவாலான கதாபாத்திரம். நான் எல்லாவற்றையும் உங்களிடம் தருகிறேன்! விரைவில் வருகிறது ‘லைகர்’” என்று விஜய் தேவரகொண்டா குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டருக்கு சில நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்தாலும், பட புரமோஷனுக்கான இப்படியா செய்வது என்று வழக்கம்போல் விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஏற்கனவே ‘ஆளவந்தான்’ படத்தில் கமல்ஹாசன், ‘பி.கே.’ படத்தில் அமீர்கான் இதுபோன்று தோன்றியது அந்த சமயங்களில் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில், தற்போது இந்தப் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.