கடந்த வருடம் இதேநாளில் இம்மண்ணைவிட்டு பிரிந்த ‘காந்தக் குரலோன்’ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் அற்புதக் குரலுக்கு, சிறு நினைவஞ்சலி இங்கே.
பயணமொன்றின்போது 'போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே' எனும் வரிகளை ஒலிக்கவிட்டால், ஒரே நொடியில் அந்தப் பயணம் எத்தனை அழகாகவும் ரம்மியமாகவும் ரசனையானதாகவும் மாறிவிடுகிறது நமக்கு?! இந்தப் பாடல் மட்டுமா... மன்றம் வந்த தென்றலுக்கு, சங்கீத மேகம், மண்ணில் இந்த காதலின்றி, காதல் ரோஜாவே, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என எத்தனை எத்தனையோ பாடல்கள் நமது ஆன்மாவையே குளிர்விக்கும் தன்மைக் கொண்டது. தன்னிச்சையாகவோ அனிச்சையாகவோ மனதுக்குள் ஒலிக்கும் அல்லது முணுமுணுக்கும் இப்படியான பாலுவின் பாடல்கள்தான் எத்தனை எத்தனை நம்மிடம் உள்ளது.
எஸ்.பி.பி.யின் காந்தக் குரலில் காதல், சோகம், குதூகலம், கற்பனை, மோகம் என மனித நினைவின் அடுக்குகளில் விரவிக் கிடக்கும் எல்லா உணர்வுகளும் தருணங்களும் இருக்கும். அதனாலேயே தலைமுறை இடைவெளி காணாத ஒரேயொரு பாடகராக தமிழ் திரையுலக வரலாற்றில் அவர் விளங்கி நிற்கிறார். 1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று தலைமுறைகளை கண்டவர், 16 மொழிகளுக்கு மேல் இதுவரை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னிலை பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஆளுமையும் அவர்தான். இப்படி தலைமுறைகள் கடந்து எல்லா காலமாற்றங்களிலும் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்.
தொடர்புடைய செய்தி: சங்கீத மேகத்தில் கலந்த 'பாடும் நிலா'வுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியினருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொணடம்மாபேட்டை கிராமத்தில் 4 ஜூன் 1946 அன்று பிறந்தார். இவரின் தந்தை சாம்பமூர்த்தி ஒரு இசைக் கலைஞர் என்பதால், எஸ்பிபிக்கு இளம் வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தது. தந்தையின் இசையமைப்பை கவனித்து இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். இசை ஆர்வம் ஒருபுறம் இருக்க, பொறியாளராக வேண்டும் என்பதுதான் எஸ்பிபியின் வாழ்க்கை லட்சியமாகவும் ஆசையாகவும் இருந்தது. அதற்காக பியுசி தேர்வு எழுதியிருந்த அவர், நெல்லூரில் நண்பர்களுடன் இணைந்து இசைக்குழு ஒன்றைத் தொடங்கியிருந்தார்ச். பின்னர், சென்னையில் ஏஎம்ஐஇ படித்தார். படித்துக்கொண்டே சினிமாவில் பாட வாய்ப்பு தேடி வந்தார். பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே பாட வாய்ப்பு கிடைத்தது. ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் நடிகை ரமாபிரபாவின் பிறந்தநாளுக்கு ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ என்று பாடிக்கொண்டே அந்த காட்சியில் தோன்றுவார் எஸ்பிபி. இதுதான் அவரது முதல் அரங்கேற்றம்.
பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லட்சோப லட்சம் ரசிகர்களை தன்வசம் இழுத்துக்கொண்டார் எஸ்.பி.பி. ஏராளமான மாநில அரசு விருதுகள், கலை அமைப்புகளின் விருதுகள் ஆகியவற்றோடு இந்திய அரசின் மிக உயர்வான விருதான 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதும் இவரை வந்து சேர்ந்தது. இதுவரை தேசிய விருதினை தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் பெற்ற ஒரே பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர, டப்பிங் ஆர்டிஸ்ட் என்ற பன்முகம் கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
'மன்மத லீலை' என்ற தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'மன்மதா லீலா' படத்தில் எஸ்பிபி டப்பிங் கலைஞராகவும் உருவெடுத்தார். அந்தப் படத்தில் கமலஹாசனுக்காக குரல் கொடுத்தார் அவர். கமலஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், பாக்யராஜ், மோகன், அனில்கபூர், கிரீஷ் கர்னாட், ஜெமினி கணேசன், அா்ஜுன் சா்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு தமிழன்றி பிற மொழிப்படங்களில் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
இத்தனை பேருக்கு குரல் கொடுத்த அந்த காந்த குரலோனின் வாழ்வில், அவர் பாடிய 'எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே...' எனும் பாடல் வரிகள் நிதர்சனமாகவும் ஆகியுள்ளது. அந்தவகையில் அவரது பாடல்கள் இன்றும் நம்மை பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு அவர் குரல், இசை எனும் காற்றில் இரண்டறக்கலந்திருக்கிறது. இசை இருக்கும் வரை அவரது புகழ் இருக்கும்.