இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழும் லதா மங்கேஷ்கர் இன்று (பிப்.6) காலமானார். திரையுலகில் லதா மங்கேஷ்கர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்ப்போம்.
1929 செப்டம்பர் 28 அன்று மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் பண்டிட் தீனாநாத் மங்ஷே்கர் - ஷெவந்தி மங்கேஷ்கரின் மகளாக பிறந்தார் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது.
13-வது வயதில் தொடங்கிய இசை வாழ்க்கை:
தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கினார் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். தனிப்பாடல்களாக 25,000 பாடல்கள் வரை பாடியிருக்கின்றார். அதிகமான பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கின்றார்.
‛நைட்டிங்கேள் ஆப் இந்தியா’ :
கிட்டத்தட்ட ஏழு தசாப்த கால இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்க முடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் என்பதால், ‛நைட்டிங்கேள் ஆப் இந்தியா, குயின் ஆப் மெலடி, வாய்ஸ் ஆப் தி நேஷன்'' என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆனார். தமிழில் சத்யா படத்தில் "வளையோசை கலகலவென." என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
நவ்ஷத் முதல் இளையராஜா வரை:
நவ்ஷத், ஷங்கர் ஜெய்கிஷன், சி.ராமச்சந்திரா, அனில் பிஸ்வாஸ், ஹேமந்த் குமார், ரவி, சலீல் சௌத்ரி, எஸ் டி பர்மன், ஆர் டி பர்மன், மதன் மோகன், கல்யாணஜி ஆனந்த்ஜி, ராகேஷ் ரோஷன், ஆனந்த் மிலிந்த், அனுமாலிக், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் பணியாற்றிய பெருமை மிக்கவர்.
பின்னணி பாடகியாக மட்டுமல்லாது ராம் ராம் பாவ்னே, மராத்தா டிட்டுகா மெல்வாவா, மொஹித்யாஞ்சி மஞ்சுளா, ஸாதி மான்ஸா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகி, இசையமைப்பை தாண்டி வாடல், ஜாஞ்சார், காஞ்சன் கங்கா, லெகின் ஆகிய 4 படங்களை தயாரித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி(1999-2005):
லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டிருந்தது. திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றிருந்தார். 1999 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் லதா மங்கேஷ்கர் பதவி வகித்துள்ளார்.
கொரோனா பறித்துக் கொண்ட கானக்குயில்
92 வயதான லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்ததால் இன்று காலை 8.12 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக , பிப்ரவரி 6 மற்றும் 7 ஆகிய 2 நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: வாவா சுரேஷ் எனும் நாகப்பாம்புகளின் நாயகன் : கடிகள்.. காயங்கள் புதிதல்ல-தவறு நடந்தது எங்கே?