தமிழ் சினிமாவில் நடன வடிவமைப்பாளராக கவனம் பெற்றவர் சாண்டி. பாடல்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து கொண்டிருந்தவர் சினிமாவில் சில கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான `லியோ' படத்தில் ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் சாண்டி. சாக்லேட் காஃபி கேட்பது, விஜயுடன் சண்டை என அவரது கதாப்பாத்திரம் இப்படத்தில் மிகப் பிரபலமானது. தற்போது மலையாளத்தில் இவர் வில்லனாக நடித்துள்ள `லோகா' படம் மிகப்பெரிய ஹிட்டாகியுள்ளது. அப்படம் பற்றி பல பேட்டிகளில் பேசி வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியில் LCU மற்றும் லோகா என இரு யுனிவர்சில் இருப்பது மகிழ்ச்சி எனத் தெரிவித்தார் சாண்டி. உடனே அந்த தொகுப்பாளர் LCUல் உங்கள் பாத்திரம் முடிந்துவிட்டதே எனக் கேள்வி எழுப்ப "அதற்குதான் ப்ரீகுவல் இருக்கிறதே. அவர் (லோகேஷ் கனகராஜ்) ப்ரீகுவல் திட்டமிட்டிருந்தார், நானும் மிஷ்கின் சாரும் தனியாக ஒரு கதை. இவர்கள் இங்கு வருவதற்கு முன்பு யாராக இருந்தார்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என ஒரு கதை இருந்தது. அதுவும் தயாராக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் அது வரலாம்" என பதிலளித்தார்.
`லியோ' படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதற்கு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என லோகேஷும் பல பேட்டிகளில் கூறியுள்ளார். ஆனால் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதால் லியோ 2வுக்கு வாய்ப்பில்லை. இந்த சூழலில் லியோ ப்ரீக்குவல் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.