சினிமா

குளியல் தொட்டியில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி... அதிரவைக்கும் கடைசி நிமிடங்கள்

குளியல் தொட்டியில் மயங்கிக் கிடந்த ஸ்ரீதேவி... அதிரவைக்கும் கடைசி நிமிடங்கள்

Rasus

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனங்களைக் கவர்ந்த ஸ்ரீதேவிக்கு, கடந்த சனிக்கிழமை கடைசி நாளாக அமைந்துவிட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து துபாய் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

திருமண நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், அவர்களது இளைய மகள் குஷி கபூர் ஆகியோர் கடந்த வாரமே ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் காய்மா பகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். துபாயில் உள்ள ஜூமைரா எமிரேட்ஸ் டவர் ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு போனி கபூர் மட்டும் மும்பை திரும்பிவிட்டார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக சனிக்கிழமை மாலை மீண்டும் துபாய்க்குத் திரும்பிய போனி கபூர் ஸ்ரீதேவியின் அறைக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது துபாயில் மாலை 5.30 மணி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியை எழுப்பிய போனி கபூர் 15 நிமிடங்கள் வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு இரவு விருந்துக்காக ஸ்ரீதேவியை அழைத்திருக்கிறார். அப்போது பாத்ரூமுக்குச் சென்ற ஸ்ரீதேவி, 15 நிமிடங்கள் வரை திரும்பவில்லை. கதவைப் பலமுறை தட்டியும் திறக்காததால், அதை உடைத்து உள்ள நுழைந்து பார்த்திருக்கிறார் போனி கபூர். அங்கு ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் கிடந்திருக்கிறார். அவரை எழுப்ப முயற்சித்த போனி கபூர், பின்னர் நண்பர் ஒருவரை துணைக்கு அழைத்திருக்கிறார். சுமார் 9 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். உடனடியாக காவல்துறையினரும் மருத்துவர்களும் ஹோட்டல் அறைக்கு விரைந்திருக்கிறார்கள். ஸ்ரீதேவியை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.