சமூக வலைதளமான யு டியூப்பில் லட்சுமி குறும்படம் வைரலாக பரவி வருகிறது.
ஒரு பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை பற்றி பேசும் குறும்படம் லட்சுமி. மிக அழகான ஒளிப்பதிவு. நேர்த்தியான தொழில்நுட்பம்.தரமான நட்சத்திர தேர்வு என களைகட்டி இருக்கும் இந்தக் குறும்படம் சர்வதேச அளவில் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சினி பெஸ்ட் விழாவில் இது அரை இறுதி சுற்றில் வெற்றியும் பெற்றுள்ளது. சராசரி நடுத்தர வர்க்க பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தை சர்ஜூன் கே.எம். இயக்கியுள்ளார்.
ஒரு பெண்ணின் இருளான பக்கங்களை இவர் அலசியிருக்கிறார். பெண் எங்கும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறாள். ஆண்கள் சூழ்ந்த உலகத்தில் அவள் தேவைக்கு தக்க பயன்படும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுவதாகச் சொல்கிறது கதை. இதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் தமிழ் சமூகம் என்னவோ இதனை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
கதையில் சேகரின் மனைவியான லட்சுமி இரயில் சிநேகம் மூலம் கதிர் என்பவரின் வாழ்க்கைக்குள் எப்படி பிரவேசிக்கிறாள் என சில உண்மைகளை வெளிப்படையாக பேசுவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.