சினிமா

“தர்பாரில் சசிகலா தொடர்பானதாக கருதப்படும் வசனத்தை நீக்கத் தயார்” - லைகா பட நிறுவனம்

“தர்பாரில் சசிகலா தொடர்பானதாக கருதப்படும் வசனத்தை நீக்கத் தயார்” - லைகா பட நிறுவனம்

webteam

தர்பார் படத்தில் சசிகலா தொடர்பாக எழுந்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கத் தயார் என லைகா பட நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாகவும், சுனில் ஷெட்டி எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 7ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ரஜினிகாந்த் மும்பை காவல் ஆணையராக நடித்துள்ளார். பணமிருந்தால் சிறைக்கைதிகூட ஷாப்பிங் போகலாம், சவுத்தில் கூட சிறைக்கைதி ஒருவர் வெளியில் சென்று வருவதாக தெரிகிறது என்ற வசனம் தர்பார் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இது மறைமுகமாக சசிகலாவை குறிப்பிடுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து சசிகலா குறித்த காட்சியை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாரையும் புண்படுத்தும் வகையில் அந்த வசனங்கள் வைக்கப்பட்டவில்ல எனவும் யாரையேனும் புண்படுத்தும் படி இருந்தால் அந்த காட்சியை நீக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளது.