நயன்தாரா  முகநூல்
சினிமா

மாடல் அழகியாக தொடங்கிய பயணம்.. சினிமாவில் மகுடம் சூடிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தாள் இன்று!

தமிழ் திரைத்துறையின் முக்கிய நடிகையான நயன்தாராவின் பிறந்தநாள் இன்று... மாடல் அழகியாக வாழ்வைத் தொடங்கி சினிமாவில் மகுடம் சூடிய நாயகியின் கலைப் பயணத்தை விரிவாகப் பார்க்கலாம்...

PT WEB

மாடலிங் துறையில் இருந்து வந்து மகுடம் சூடிய நட்சத்திரம்... வீழ்ச்சிகளை வென்று வெற்றிக் கோட்டை கட்டிய நடிகை... மோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை தடம் பதித்த நாயகி... 21 ஆண்டுகால திரைப்பயணத்தில் பல உச்சங்களைத் தொட்ட இணையில்லா ஹீரோயின்...

நயன்தாரா...!
நயன்தாரா

இவரது முதல் திரைப்படமான ஐயா திரைப்படத்தில் ‘ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்ற பாடலில் கள்ளமறியா முகத்துடன் காதல் பாடல் பாடிக் கொண்டிருப்பார். ஆண்டுக்கு பல புது ஹீரோயின்கள் சினிமாவில் அறிமுகமாவதைப்போல், அவரையும் சிலர் நினைத்திருப்பார்கள்.

ஆனால், அந்த நடிகை ஒரு நாள் உச்சம் தொடும் நட்சத்திரமாக ஜொலிக்கப்போகிறார் என்பதை எவரும் அறிந்திருக்கமாட்டார்கள்.

விடா முயற்சி, கடும் பயிற்சியின் வாயிலாக சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார், நயன்தாரா. மலையாளத்தில் 'மனசினக்கரே' படத்தின் வெற்றிக்குப்பின் சரத்குமாரின் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 2ஆவது படத்திலேயே உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கும் வாய்ப்பு எத்தனை ஹீரோயின்களுக்கு கிடைத்திருக்கும் என தெரியாது.

ஆனால், அப்படியொரு வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது. 2ஆவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஹீரோயின் ஆனார். அதுவும் சந்திரமுகி எனும் ப்ளாக்பஸ்டர் படத்தில்! அதன்பின், அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு எல்லாம் முக்கிய நாயகியாக உருவெடுத்தார், நயன்தாரா.

உச்ச நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள், பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றில் தனக்குப் பிடித்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். அன்றைய காலகட்டத்தில் அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும், அதை கடந்து உச்ச நடிகையாகவே தன்னை தக்க வைத்துக் கொண்டார்.

அஜித்தின் பில்லா படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம், ஹாலிவுட் ஹீரோயின் அளவுக்கு இருந்ததாக பேசப்பட்டது.

தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் சிறிய இடைவெளி எடுத்த நயன்தாரா, அட்லியின் ராஜா ராணி படம் மூலம் கம்பேக் கொடுத்தார். கதை தேர்வில் அவர் எடுத்துக் கொண்ட கவனம், நடிப்பில் அவர் காண்பித்த தனித்துவம் எல்லாம் நயன்தாரா எனும் நடிகை நட்சத்திரமாக ஜொலிக்க உதவியது.

கமர்ஷியல் படங்களில் நடிப்பதைப் போலவே, அழுத்தமான கதையமைப்பைக் கொண்ட 'அறம்' போன்ற படங்களிலும் நடித்து வியப்பைக் கொடுத்தார். தனிப்பட்ட வாழ்வில் பல துயரங்களை எதிர்கொண்டாலும், காதல் அவரை கைவிடவில்லை... இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன்

வெற்றிகளை பெற்று புகழ் வெளிச்சத்தில் இருந்தாலும், சினிமாவில் நயன்தாரா கடந்து வந்த பாதை அத்தனை சுலபமானது அல்ல... அதனால்தான் அவரை 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.